வாழப்பாடி அருகே, மது குடிக்க பணம் கேட்டதால் தர மறுத்த மனைவியை ஆத்திரத்தில் கணவன் தலை வேறு, உடல் வேறாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (80). கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (60). இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இரண்டு மகன்களும் ஈரோட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். நாராயணன், லட்சுமி மட்டுமே வெள்ளாளகுண்டத்தில் தனியாக இருந்தனர். இந்நிலையில், அவர்களிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. புதன்கிழமை (மார்ச் (11) நள்ளிரவு நேரத்திலும் அவர்களிடையே திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாராயணன், வீட்டில் இருந்த அரிவாளால் லட்சுமியின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், வாழப்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து டிஎஸ்பி சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் சுப்ரமணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். காவல்துறையினர் சென்றபோது லட்சுமியின் துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு நாராயணன் வீட்டுக்குள் அமர்ந்து இருந்தார்.
காவல்துறை விசாரணையில், நாராயணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அவர் மது குடிப்பதற்காக லட்சுமியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் வாக்குவாதம் வளர்ந்துள்ளது.
அப்போது லட்சுமி, இந்த வயதிலும் உன்னை ஒரு பெண் மாமா என்று கூப்பிடுகிறாளே என்று கூறி தகராறு செய்துள்ளார். அதற்கு நாராயணன், நீயும்தான் பல ஆம்பிளைகளுடன் பேசுகிறாய். உன் நடவடிக்கையிலும்தான் சந்தேகம் இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் மேலும் முற்ற, ஆத்திரத்தில் அவர் அரிவாளால் மனைவியை தலை தனியாக உடல் தனியாக வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நாராயணனை காவல்துறையினர் கைது செய்தனர். உடற்கூறு ஆய்வுக்காக சடலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.