Advertisment

நூறாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம்... இன்றுவரை ஊரைக் காக்க ஒருநாள் விரதம் இருக்கும் பெண் குழந்தைகள்...!

Advertisment

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு நீண்ட நெடிய காலந்தொட்டு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்னோர்களின் கலாச்சார நிகழ்வுகளை இன்றைய தலைமுறையும் தொடர்ந்து வருவது சிறப்புதான். அப்படியான ஒரு நிகழ்வுதான் நோயிலிருந்து ஊரைக் காக்க பெண் குழந்தைகள் நடத்தும் விநோத திருவிழா.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில்தான் ஊரைக் காக்க பெண் குழந்தைகள் பங்கேற்று நடத்திய வித்தியாசமான திருவிழா நடந்தது.

செரியலூர் கிராமத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டுக்கு காட்டுப் வழியாக சென்றபோது காணாமல் போனதாகவும், பல நாட்களுக்குப் பிறகு கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தின் அருகே அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விழுந்ததாகவும்கிராம மக்கள் கூறுகின்றனர்.

Advertisment

சிறுமி கொப்பியம்மாள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் அதன் பிறகு ஊரில் யாரும் அம்மை போன்ற கொடிய நோயால் பலியாகக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கும் பெண் குழந்தைகள் (பருவம் எய்தாத பெண் குழந்தைகள்) நோய் நொடியிலிருந்து ஊரைக் காக்க பொங்கல் நாளுக்கு மறுநாள் விரதம் இருந்து வீட்டில் வெண் பொங்கல் வைத்துக் கன்று ஈனாத பசுங்கன்று சாணத்தில் ஒரு பெரிய பிள்ளையாரும், 92 சாணக் கொழுக்கட்டைகளும் பிடித்து அதில் கிருமிநாசினிகள் கூழைப்பூ, ஆவாரம்பூ, அருகம்புல், வேப்பிலை மற்றும் கரும்பு, வெல்லம் வைத்து 3 படையலிட்டு இரண்டு படையல்களை இதற்காகவே பிரத்தியேகமாகதயாரிக்கப்பட்ட ஓலை கூடையில் வைத்து கொப்பியம்மாள் இறந்த பழமையான பாலை மரத்தடிக்கு கொண்டு செல்கின்றனர்.

குழந்தைகள் கொண்டுவரும் படையல் கூடைகளைப் பாலை மரத்தடியில் வைத்து குழந்தைகள், பெண்கள் கும்மியடித்து வழிபட்டு, பின்னர்ஊர்வலமாகத் தீர்த்தான் ஊரணி கரைக்குச் சென்று அங்கு ஓலைக்கூடையில் குழந்தைகள் கொண்டுவந்த பொருட்களைப் படையலிட்டு வழிபாடு நடத்துகின்றனர். இந்த விழாவில் சிறிய பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அவர்களின் அம்மா மற்றும் சகோதரிகள் ஓலைக்கூடைகளைத் தூக்கிச் செல்கின்றனர். வழிபாடுகள் முடிந்த பிறகே விரதம் முடிக்கின்றனர்.

'பல நூறு ஆண்டுகளாக எங்கள் முன்னோர்கள் தொடங்கிய இந்த கலாச்சார நிகழ்ச்சி இன்றைக்கு மட்டுமல்ல இனியும் இந்த கிராமத்தில் தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்கின்ற கிராம மக்கள், 'இப்படிச் செய்வதால் எங்கள் கிராமத்தில் அம்மையால் யாரும் இறப்பதில்லை. அதனால் முன்னோர்களின் வழிகாட்டல்படி தொடர்ந்து வழிபட்டு வருகிறோம். எங்கள் கிராமத்தின் நம்பிக்கை இது.எங்கள் ஊரைக் காக்க ஒரு நாள் விரதம் இருப்பதை பெருமையாக நினைக்கிறோம்' என்றனர் பெண் குழந்தைகள்.

இதே நாளில் மற்றொரு பக்கம் இளைஞர்கள் போர்க்காய் தேங்காய் போட்டிகளை நடத்தி பலரையும் மகிழ்வித்துள்ளனர்.

village PONGAL FESTIVAL Pudukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe