
பாகிஸ்தானில் உள்ள உலக தீவிரவாத அமைப்பினர் தங்களின் ஆயுதப் பெருக்கல்களுக்கும் ஆதாயத்திற்காகவும் பணமதிப்புள்ள போதைப் பொருட்களை அங்கிருந்து இலங்கையைச் சேர்ந்த சர்வதேசக் கடத்தல் புள்ளிகளின் மூலமாகக் கடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் இந்தியப் பெருங்கடலின் தென்முனைப் பகுதியான இலங்கையை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாக் கடல் வழியை சூட்சமமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தென்பகுதியின் ஆழ்கடல் பகுதியில் புழங்கிவரும் மீனவர்களின் கூற்றுப்படி, குமரிக் கடல் பகுதியிலிருந்து ராமநாதபுரம் கடற்கரையை ஒட்டிய பல நாட்டிங்கல் மைல் தொலைவு கடலின் ஆழம் குறைவு. சாதாரணப் படகுகள் மின்சாரப் படகுகள் மட்டுமே போய்வரக் கூடிய பூகோள அமைப்பு கொண்ட இப்பகுதியில், பெரிய கப்பல்கள் தரைதட்டி சிக்கிக்கொள்ளும். மீட்பது இரண்டாம் பட்சம்.

இந்த அமைப்பை அறிந்த இந்தியக் கடலோரக் காவல் படையான கோஸ்டல் கார்டின் கப்பல்களும், இந்தப் பக்கம் வராமல் தொலைவிலேயே தனது கண்காணிப்பை வைத்துக் கொள்ளும். இந்த வாய்ப்பைபயன்படுத்திக் கொண்டுதான், சர்வதேசப் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருளை வங்காளவிரிகுடா கடல் ரூட்டில் கடத்தி வருகின்றனர் என்பது தான் கடல்வாழ்க்கையைக் கொண்டவர்களின் தியரி. அதேசமயம் இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியக் கடல் எல்லைப் பகுதிக்குள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட சேட்டிலைட் ஃபோன்கள் பயன்படுத்தப்பட்டதும்ஆந்திராவிலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் செயற்கைகோள் சிக்னலில் பதிவானதும் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியின் தென்பகுதியின் இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் ஒரு படகு நுழைந்தது தெரியவந்தது. கடலோரக் காவல்படை கப்பலான வைபவ்களின் காவல் படையினர், சேனையா துவா என்ற அந்த இலங்கையைச் சேர்ந்த படகைச் சுற்றி வளைத்துள்ளனர். சோதனையில் அந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இருந்தனர். மேலும், அதில் தடை செய்யப்பட்ட துபாயில் தயாரிக்கப்பட்ட துரையா வகை பிரிபெய்டு சேட்டிலைட் ஃபோன்கள் சுமார் 2.50 லட்சம் மதிப்பிலானது சிக்கியிருக்கிறது. தொடர் தீவிர சோதனையில் படகின் கீழ் பகுதியிலுள்ள காலியான தனிவகை பெட்ரோல் டேங்கைத் திறந்தபோது, அதில் 20 சிறிய பெட்டிகளில் 99 பாக்கெட்களில் தயார் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருள், சுமார் 100 கிலோவரை இருந்ததையும் கைப்பற்றிய கடலோரப் படையினர், அதிலிருந்த 5 கைத்துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த நிகம்புவில் உள்ள அலன்சுகுட்டிகேசின்கா தீப்தா சானி பெர்னாண்டோ என்பவருக்குச் சொந்தமான படகு, சிக்கிய ஹெராயின் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் இன்று சென்னையிலுள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கடலோரக் காவல்படையினர் மூலம் தெரியவருகிறது. மேலும் பிடிபட்ட போதைச் சரக்கின் சர்வதேசச் சந்தைமதிப்பு 300 கோடி என்றும், பாகிஸ்தானிலிருந்து ஆஸ்திரேலியாவிலுள்ள சர்வதேசக் கடத்தல் கும்பல்களிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)