
தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் பகுதியிலுள்ள புதியம்புத்தூரின் மேல அரசரடி ஏரியாவின் செல்வராஜ், பூரணம் தம்பதியருக்கு அருண்சுரேஷ் (12), அருண் வெங்கடேஷ் (12) என்ற இரட்டைப் பிள்ளைகளோடு மகேஸ்வரி (14) என்ற மகளும் உள்ளார்.
தூத்துக்குடியின் கிழக்குக் கடற்கரை சாலையில் ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வந்த செல்வராஜ், குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். ஆனாலும் துவளாத மனைவி பூரணம், அந்த ஓட்டலை தானே நடத்தி வந்திருக்கிறார். பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றாலும் வீட்டிலிருந்தாலும் அவர்களுக்கான உணவு தினமும் கடையிலிருந்துபோவதேவழக்கம்.
தற்போது கரோனாத் தொற்று யுகம் என்பதால், பள்ளிமூடல் காரணமாக பிள்ளைகள் வீட்டிலிருந்திருக்கின்றனர். அதே சமயம் இரட்டையர்களான அருண்சுரேஷூம், அருண் வெங்கடேஷும் மதியம் கடையில் சாப்பிட்டுவிட்டு, தங்களது சகோதரிக்காக உணவு எடுத்துக்கொண்டு செல்வது வாடிக்கை. நேற்றுமுன்தினம் மதியம் வழக்கப்படி சகோதரர்கள் கடையில் சாப்பிட்டுவிட்டு தங்களின் சகோதரி மகேஸ்வரிக்கான உணவுப் பார்சல் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள். வெகுநேரமாகியும் இரட்டையர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தாய் அனைவரும் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அதுகுறித்த புகாரும் காவல்நிலையத்தில் தரப்பட்டு போலீசாரின் தேடலும் துவங்கியிருக்கிறது.

இந்த நிலையில் கிராமம் அருகிலுள்ள குளத்தின் கரையில் உணவுப் பொட்டலம் கிடக்க, குளத்தின் தண்ணீரில் இரட்டைச் சிறுவர்களின் சடலமும் மிதப்பது தெரியவர, பதைபதைப்போடு சென்று பார்த்த தாயும் உறவினர்களும் கதறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரட்டையர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார், அண்மையில் பெய்த மழை காரணமாக, குளத்திற்குத் தண்ணீர் வந்துள்ளது. சகோதரிக்குச் சாப்பாடு கொண்டு வந்தபோது குளத்தில் குளிப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர். பரிதாபமாகத் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். என்றார்.
தூர்வாரப்படாத அந்த ஊரணி, பெய்த மழையால் முழுதும்நிரம்பியுள்ளது.சேரும் சகதியுமாகியிருக்கிறது. பாவம் இரட்டைச் சிறுவர்கள் குளிக்கும் ஆசையில், நீச்சல் தெரியாமல்அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது அந்தப் பகுதியைக் கனத்த சோகத்தில் தள்ளியிருக்கிறது. எனினும், சம்பவம் காரணமாக விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி.ஜெயகுமார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)