incident in thittakudi

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள வள்ளல் குமாரன் விளை பகுதியை சேர்ந்தவர் பினு குட்டன். இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவில் உள்ள கொடிக்களம், திருவட்டதுறை ஆகிய கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலராக சிலஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி ரோஸி, ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் இருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இவரது மனைவி ரோஸி உடல்நிலை சரியில்லாமல் திடீரென்று இறந்து விட்டார். அவரது பிள்ளைகள் பினு குட்டனின் மாமனார் ஊரான மதுரையில் வசித்துவருகின்றனர்.

Advertisment

பெண்ணாடம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு பணி செய்து வந்துள்ளார் பினு குட்டன். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தங்கியிருந்த அறைக்கு பணி நிமித்தம் காரணமாக கிராம உதவியாளர் கரிகாலன் என்பவர் சென்றுள்ளார். அப்போது அறையினுள் கதவின் உள்பக்கம்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அறையின் அருகில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது அங்குள்ள மின்விசிறியில் பினு குட்டன் தனது கைலியால் தூக்கிட்டு பிணமாக தொங்கியதை கண்டு பதறிப்போன கரிகாலன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பெண்ணாடம் காவல்துறை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் விருத்தாச்சலம் டிஎஸ்பி மோகன் மற்றும் போலீசார் பினுகுட்டன் தூக்கில் தொங்கிய அறையை திறந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் அவரது இடது கையில் பிளேடால் அறுத்துக் கொண்டும் அதன்பிறகு கைலியால் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.பெண்ணாடம் கிராம நிர்வாக அலுவலர் துரைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் கவலையில் பினு குட்டன் இருந்து வந்ததாகவும்,அதன் காரணமாகதற்கொலை செய்து கொண்டதாகவும்அவருடன் வேலை பார்த்து வந்த கிராம நிர்வாக அலுவலர்கள்,கிராம பணியாளர்கள் கூறுகின்றனர்.கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment