இறந்தவர் பெயரில் பாரத பிரதமர் திட்டத்தில் வீடு மோசடி.. ஆவணங்களுடன் அம்பலம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த சில வருடங்களில் பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் 140 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படாமலேயே கட்டப்பட்டதாக போலியான ஆவணங்கள் தயாரித்து அதிகாரிகளும் சில புரோக்கர்களும் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளனர்.

incident in thiruvarur

உயிருடன் இருப்பவர்கள் பெயரில் மட்டுமின்றி இறந்தவர்கள் பெயரிலும் இந்த மோசடி நடந்துள்ளது. அதில் ஒருவர் தான் கமலப்பன் மகன் ஜெயசந்திரன். இவர்ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி.இவர் உடல்நலகுறைவால் கடந்த 14-9-2018 இறந்துவிட்டார். ஆனால் இவர் பெயரில் வீடுகட்டியதாக 4 தவணையாக பணமும் கட்டுமானப் பொருட்களும் எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயச்சந்திரன் பெயரில் நடந்த மோசடி பற்றிய முழு விபரம்.. திட்டத்திற்கான இவரது பெயரில் உள்ள பதிவு எண் TN 2222811. இவரது பிறந்த வருடம் 1951 என்று குறிப்பிடபட்டு வயது 61 என்று பதிவாகி உள்ளது.

2018 இறந்த இவரது பெயரில் ரூ 1,20,000 பணம் 4 தவணைகளாக வழங்கபட்டிருக்கிறது. அதாவது முதல் தவணை 25-02-19 தேதியில் உத்தரவு போட்டு 02-03-19 தேதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ 26,029 எடுக்கப்பட்டுள்ளது, அதே போல 30-05-19 அன்று இரண்டாம் தவணை ரூ 26,7151, 19-06-19 தேதியில் மூன்றாம் தவணை ரூ. 26,681, 13-7-19 தேதியில் நான்காவது தவணை ரூ.40,575 பணமும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானப் பொருள் (கம்பி, ஜல்லி)ஆகியவை சுமார் 55,000 ரூபாய் மதிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க கணக்குச் சொல்கிறது(மொத்தம் 1,75,000 (1,20,000 + 55,000) ).

incident in thiruvarur

2018-இல் இறந்தவர் கட்டிய வீட்டை 08-02-19, 21-05-19, 15-06-19, 04-7-19 ஆகிய தேதிகளில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ததாக ஆவணம் கூறுகிறது.

இப்படி அதிகாரிகள் ஆய்வு செய்து பார்த்து பார்த்துக் கட்டிய அந்த வீடு எங்கே போனது என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது. அது சரி 2018 இறந்தவரிடம் எங்கே போய்ப் பார்த்து கையெழுத்து வாங்கியிருப்பார்கள்?ஏழைகளின் வயிற்றில் அடித்து இப்படியான ஒரு பிழைப்பு தேவையா? இப்படி இறந்தவர்களின் பெயரில் கூட மோடி வீடு, கழிவறைகளில் கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதை பா.ஜ.க.வினர் கூட கண்டுகொள்ளவில்லைஎன்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது சான்றாக உள்ளது. இந்த மோசடியில் எத்தனை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பார்கள் முறையான விசாரணைநடந்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இந்த மோசடியை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிடுமா? எனக் கேள்விகளும் எழுந்துள்ளது.

house Scam Thiruvarur
இதையும் படியுங்கள்
Subscribe