திருவண்ணாமலையில் வீட்டின் மேற்கூரை இடிந்துவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
'புரெவி' புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்புறம் சமையல் செய்யும்பொழுது வீட்டின் மேற்கூரை இடிந்து, சரிந்து விழுந்ததில் லட்சுமி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருவண்ணாமலையில் பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள 1,949 எரிகளில், 224 ஏரிகள் முழுவதும் நிரம்பியதாகவும், 156 ஏரிகள் 99 சதவிகிதம் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்நிலைகளில் குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ கூடாது எனத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.