incident in thirupathur

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கைலாசகிரி பகுதியில் வசித்து வருபவர் லோகேஸ்வரன். அவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினருக்கு 9 வயதில் ஜஸ்வந்த் என்கிற மகனும், 7 வயதில் ப்ரீத்தா என்கிற மகளும் இருந்தனர். கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி கைலாசகிரி மலைப்பகுதியிலுள்ள முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர்.

Advertisment

மலை உச்சிக்குச்சென்ற லோகேஸ்வரனும், அவரது மனைவியும் அங்குள்ள பாறையின்மீது அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்துள்ளனர். மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் ப்ரீத்தா ஆகியோர் அங்குள்ள குளத்தில் மீன் பிடித்தபடி விளையாடிக்கொண்டு இருந்தபோது, திடீரென ப்ரீத்தா குளத்து நீருக்குள் வழுக்கி விழுந்துள்ளார். தங்கையைக் காப்பாற்ற அண்ணன் ஜஸ்வந்த் முயற்சித்துள்ளார். அந்த சிறுவனால் முடியாமல் இருவரும் குளத்தில் மூழ்கி உள்ளனர். அவர்களின் சத்தத்தைக் கேட்ட தாய் – தந்தை இருவரும் குளத்தில் குதித்து குழந்தைகளைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லையாம்.

Advertisment

உமராபாத் காவல்துறையினர், ஆம்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு ஜஸ்வந்த் மற்றும் ஹரி ப்ரீத்தா இருவரையும் சடலமாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைத்திருந்தனர்.

மகன், மகள் இருவரையும் இழந்த லோகேஸ்வரனும், அவரது மனைவியும் மருத்துவமனை வாசலில் அமர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் 11ஆம் தேதி மதியம் துக்கம் தாங்காமல் லோகேஷ்வரன் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட திருப்பத்தூர் எஸ்.பி சிபி.சக்கரவர்த்தி உடனடியாக மருத்துவத்துறையினரிடம் பேசி குழந்தைகள் உடலை உடனடியாக உடற்கூராய்வு முடித்து தர வைத்தார். இரண்டு குழந்தைகள் இறப்பைத் தொடர்ந்து அந்த குழந்தைகளின் தந்தை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment