பாண்டமங்கலமா அப்ப காலை ஒடி! இளைஞனின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய போலீஸ்!

திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். பிளம்பர்வேலை செய்பவர். வேலை முடித்து விட்டு இவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் பாண்டமங்கலம் பிரதான சாலையில் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் குறுக்கே உறையூர் உதவி காவல் ஆய்வாளர் அழகுமுத்து, காவலர்கள் சிறப்பு எஸ்.ஐ.செல்லபாண்டியன், சுகுமார், ஓட்டுநர் இளங்கோவன் ஆகியோர் மப்டி உடையில் வட்டமாக நின்று ரோட்டை மறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அவர்களை காவலர்கள் என்று தெரியாத பிளம்பர்ஜெயக்குமார் ரோட்டில கொஞ்சம் வழிவிட்டு நில்லுங்க என்று சொல்லியிருக்கிறார்.

சிரித்து ஜாலியாக ரோட்டுக்கு நடுவே நின்று பேசிக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று நிறுத்திவிட்டு நீ எந்த ஏரியா என்று கேட்கவும். உடனே பிளம்பர்ஜெயக்குமார் நான்பண்டமங்கலம் என்று சொன்னவுடனே அந்த மப்டி காவலர்கள் பாண்டமங்கலத்துகாரனுங்க எப்பவும் திமிர் பிடிச்சவுங்கதான் என்று சொல்லிக்கொண்டே பிளம்பர்ஜெயக்குமாரை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக அடித்து உதைத்து காலை உடைத்தனர். .

incident in thiruchy

ஜெயகுமாரின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில்தான் இத்தனை சம்பவமும் நடக்கிறது. ஜெயகுமாரை நான்கு பேர் சேர்ந்து அடித்து நொறுக்குவதை பார்த்து பதறிபோன மகள் ஜெயக்குமார் மனைவியிடம் சொல்ல அவர்கள் சம்பவ இடத்திற்கு வரும் போது ஜெயக்குமாரை உதைத்து உறையூர் காவல்நிலையத்திற்கு ஜெயக்குமாரை அழைத்துச் சென்று அங்கேயும் வைத்துத் தாக்கியுள்ளனர். மது வாங்கி ஊற்றி காவல்துறையினரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் நடக்க முடியாதவாறு காலில் அடிபட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் முட்டி உடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த அவர் தன்னை இந்த நிலைக்கு தள்ளிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர், மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் ஆகியோரிடம் புகார் கொடுக்க, அவர்கள் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் ராமசந்திரனிடம் விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

incident in thiruchy

இந்த நிலையில் கால் ஒடிந்த நிலையில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஜெயக்குமார் தன்னை தாக்கி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் ஜெயக்குமாரை அவர்கள் சமூகத்தை சேர்ந்த கட்சி மாவட்ட தலைவர்களை வைத்தே வழக்கை வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நாம் நக்கீரனிடம் பேசியஜெயக்குமார், என் சமூகத்தை சேர்ந்த மேகலா என்பவரை நான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அவர் டிகிரி படித்து முடித்தவர். எங்களுக்கு 3 பெண் குழந்தைகள். எனக்கு எந்த கெட்டபழக்கமும் கிடையாது. 800 தலைகட்டு உள்ள எங்க கிராமத்தில் என்னை தலைவராக இருக்கிறேன். ஆனால் இப்போ ஒரு கால் உடைந்து என்னோட எதிர்காலத்தையே சூனியமாக்கிவிட்டார்கள் இந்த போலீஸ்காரர்கள்.

incident in thiruchy

நான் இது வரைக்கு எந்த பிரச்சனைக்கு போலீஸ்டேஷன் பக்கமே போனது இல்ல. ஆனா இப்ப என்னை கால உடைச்சு எங்க குடும்பத்தின் எதிகாலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டார்கள். நான் போலீஸ் மீது புகார் கொடுத்ததும் மருத்துவமனையில் இருந்த என்னை இன்ஸ்பெக்டர் அலாவூதீன் மற்றும் வக்கீல் மணிபாரதி என்பவர் எனக்கு 50,000 ரூபாய் கொடுத்து உனக்கு பின்னாடி வேலை வாங்கி தருகிறேன்நான்சொல்ற படி எழுதிக்கொடு என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். நான் பணத்தை வாங்க மாட்டேன் சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதன் பிறகும் தொடர்ச்சியாக என்னை பாதுகாக்க வேண்டிய என் சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கியமானவர்கள் என்னை பார்த்து ஒழுங்காவழக்கை வாபஸ் வாங்கு, நீ உயிரோடவே இருக்க முடியாது என்று என்னை மிரட்ட ஆரம்பிச்சதுதான் இன்னும் கொடுமையாக போச்சு என்று அழுதார்.

அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் பயத்துடன்தான் இருக்கிறார்கள். பயத்துடன் நம்மிடம் பேசிய மேகலா எங்களை காப்பாற்றிக்கொண்டிருந்த என் கணவர் இப்போ கால் உடைந்த நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கிறார். எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

incident in thiruchy

இந்த குடும்பத்திற்காக திருச்சி மாநகர ஆணையர் அமல்ராஜை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் நம்மிடம் ஜெயக்குமாரை தாக்கிய காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஜெயக்குமார் மீது போட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். எதிர்காலத்தை இழந்து தவிக்கும் ஜெயக்குமார் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து அந்தக் காவலர்களோ ஜெயக்குமார் குடிபோதையில் காவல் துறையினரிடம் தகராறு செய்து காவலர்களை தாக்க முயன்றதாகவும், அவரின் இருசக்கர வாகனம் பள்ளத்தில் விழுந்ததால் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது என்று அந்த பழைய பல்லவியே திரும்ப பாடி கொண்டே இருந்தனர்.

ஆனால் போலீசுடன் எந்த முன்விரோதம் இல்லாத ஒரு இளைஞனை சாதி ஈகோவில் காலை ஒடித்து எதிர்காலத்தை கேள்விக்குரிய ஆக்கியதும் இல்லாமல், பாதிக்கப்பட்ட இளைஞனின் சாதியின் அரசியல் தலைவர்களை வைத்து இளைஞரை போலீஸ் மிரட்டுவது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

case police thiruchy villagers
இதையும் படியுங்கள்
Subscribe