/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DSC_71976.jpg)
தென்காசி மாவட்டத்தின் பாப்பாக்குடி சமீபம் உள்ள முக்கூடல் முத்துமாலையம்மன் ஆலயத்தின் தசரா விழா நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த விழா நிகழ்ச்சியின் பொருட்டு, சப்பரப் பவனியின் விசேஷத்திற்காக நேற்று முன்தினம் இரவு ரவணசமுத்திலிருக்கும் தாவூர் மீரான் என்பவர் தன்னுடைய 54 வயதான லட்சுமி என்ற பெண் யானையை அழைத்து வந்திருக்கிறார். இந்த யானையைப் பராமரித்து வரும் தாவூத் மீரான் அந்த பகுதிகளின் கோவில் திருவிழா நிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்வது வழக்கமானது தான்.
மறுநாள் முக்கூடலின் தாமிபரணியாற்றில் யானையைக் குளிப்பாட்டிய தாவூத், அதற்கு உணவு அளித்துவிட்டு அன்று இரவு அங்கு தங்கினார். அன்றைய நடு இரவின்போது யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே உடனே கால் நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போகவே அந்த லட்சுமியின் உயிர் நள்ளிரவு பிரிந்தது. அதனைத் தொடர்ந்து முக்கூடல் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை வன கால்நடை மருத்துவர் மனோகரன், மற்றும் ஆலங்குளம் கால்நடை உதவி இயக்குனர் ஜான்சுபாஷ் முக்கூடல் கால் நடைமருத்துவர் சிவமுத்து ஆகியோர் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் தாமிரபரணியின் ஆற்றங்கரைப் பக்கம் யானையின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இறந்த யானையின் உடற்கூறு ஆய்வுகள் வெளியிடப்படாவிட்டாலும் அதற்கு வலிப்பு நோய் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதுவும் காரணமா என்பது உடற்கூறு ஆய்வில்தான் தெரியும் என்கிறார்கள். கேரளாவின் மலப்புரம் காட்டில் கடந்தசில மாதங்களுக்கு முன் அன்னாசிப்பழத்தில் வைத்த வெடிகுண்டைக் கடித்து தின்றதில் வாய் சிதறி,ஒருவாரம் வதைபட்டுச் செத்து மடிந்தது கர்ப்பிணி யானை.
கடந்த வாரம் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிப் பொட்டல் பகுதியில் வாய்ப் புண்ணோடு வைத்தியம் கிடைக்காமல் ஒருவாரமாக வேதனையில் அலறிக் கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணி யானை வனத்துறையினரின் பாராமுகத்தால் மரணமடைந்தது. ‘தெய்வத்திற்கு ஒப்பான யானைகள் அனாதைகளாக மடிவது லோகத்திற்கு விசேஷமல்ல என்பது கடவுள்களின் தேசத்தில் உறுதியாக நம்பப்படுபவை.’
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)