Skip to main content

கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீச்சு!

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Incident at temple in chennai

 

அண்மையில், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்றவைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்பட்டது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர், நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கருக்கா வினோத்தை போலீஸார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து நவ.15 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் ரவுடி கருக்கா வினோத்தை சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை பாரிமுனை பகுதியில் வீரபத்ர சுவாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில், இன்று (10-11-23) காலை மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த கோவிலின் உள்ளே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவிலுக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த மக்கள் கூச்சலிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மேலும், அங்கு மதுபோதையில் இருந்த நபரை பிடித்து, கைது செய்தனர்.

 

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் முரளி என்பது தெரியவந்தது. மேலும், இவர் அந்த கோவில் அருகே பழக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் பெட்ரோல் குண்டை கோவிலுக்கு வீசியதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.