The affair of taking the prisoner; Sudden change of Salem Police to Armed Forces!

சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். லாட்டரி சீட்டு வியாபாரி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

Advertisment

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, கண்ணனை அஸ்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஆத்தூர் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிறை நிர்வாகம், முன்னதாக கண்ணனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு வருமாறு கூறியுள்ளது. அதன்பேரில் கண்ணனை அழைத்துச்சென்ற அஸ்தம்பட்டி காவல் நிலைய காவலர் ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

Advertisment

இந்த விவகாரம் காவல்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுவாக ஒரு கைதி சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பாக அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவது கட்டாயம். அதற்காக சம்பந்தப்பட்ட கைதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டியதில்லை. ஆனால் அஸ்தம்பட்டி காவலர் ஒருவர் அவ்வாறு செய்தது முரணாக இருந்ததால், உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில், கண்ணனை அழைத்துச் சென்றது அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் எழுத்தராக உள்ள தலைமைக் காவலர் உமாபதி என்பது தெரியவந்தது.

எழுத்தர் பொறுப்பில் உள்ளவர்கள் பொதுவாக காவல் நிலையத்தைவிட்டு வெளியே பணிக்கு அனுப்பப்படுவதில்லை. அவ்வாறு இருக்கையில், உமாபதி மருத்துவமனைவரை கைதியை அழைத்துச் சென்றது ஏன் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேறொரு காவலர், கைதியுடன் பாதுகாப்புப் பணிக்குச் செல்ல இருந்த நிலையில், அவருக்குப் பதிலாக எழுத்தர் உமாபதி சென்றது தெரியவந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

Advertisment

இதற்கிடையே, எழுத்தர் உமாபதியை திடீரென்று சேலம் மாநகர ஆயுதப்படைக்கு இடமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.