
சேலம் அருகே, சவரத்தொழிலாளி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை, மகனை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி முனியப்பன் கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மயில்சாமி (33),இவர் சவரத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே, பிப். 25ம் தேதி மதியம், மயில்சாமியின் வீடு அருகே 33 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் கிடந்தது. அவரை மர்ம நபர்கள் தலையில் தாக்கியதில் ரத்தம் அதிகளவில் வெளியேறி இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்து கிடந்தவர், ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த மாதேஸ் என்பவரின் மகன் மகாலிங்கம் (32) என்பது தெரியவந்தது. சவரத் தொழிலாளியான அவர், குடிபோதையில் இருந்தபோது கட்டையால் அடித்தும், கல்லால் தாக்கியும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், மயில்சாமிக்கும், மகாலிங்கத்திற்கும் நீண்ட காலமாகப் பழக்கம் இருந்துள்ளது. அதன்பேரில், சம்பவத்தன்று மகாலிங்கம் பூலாவரி முனியப்பன் காடு பகுதிக்கு வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பிப். 25ம் தேதி காலையில் இருந்து திடீரென்று மயில்சாமியும், அவருடைய தந்தை தங்கவேலுவும் மாயமாகிவிட்டனர். இதனால் அவர்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது. உள்ளூரில் ஓரிடத்தில் தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)