
சேலம் அருகே, மனைவியின் தவறான தொடர்பை கண்டித்ததால், கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்றதாக புகார் கிளம்பியது. இதையடுத்து 4 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட கணவனின் சடலத்தைக் காவல்துறையினர் தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிக்குட்டையைச் சேர்ந்தவர் வேல்முருகன் (45),கார் ஓட்டுநர். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். உடல் நலக்குறைவால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, வேல்முருகன் இறந்துவிட்டார்.
இந்நிலையில், தனது மகனை சங்கீதா கொலை செய்துவிட்டார் என்று வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் (62), திடீரென்று ஜன. 27ம் தேதி காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் அவர் கூறியிருந்த விவரம்: “என் மருமகள் சங்கீதாவுக்கும், பூசாரிப்பட்டியில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் தாண்டானூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது.
இதை என் மகன் கண்டித்தான். அதனால், ஆத்திரத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு என் மகன் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனை சங்கீதா கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார். இதுமட்டுமின்றி, 13 வயதே ஆன என் பேத்தியை ஆனந்தகுமாருக்கே திருமணம் செய்து வைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இதைத் தெரிந்துகொண்ட என் பேத்தி, நடந்த விவரங்களை என்னிடம் கூறி, தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதாள். இந்தப் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு காவேரியம்மாள் புகார் மனுவில் கூறியுள்ளார்.
இந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த காரிப்பட்டி காவல்துறையினர், நான்கு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட வேல்முருகனின் சடலத்தை, வட்டாட்சியர் ஜானகி முன்னிலையில் வியாழக்கிழமை (ஜன. 28) தோண்டி எடுத்து விசாரணை நடத்தினர். சடலம் எடுக்கப்பட்ட இடத்திலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)