சேலத்தில் கடந்த மூன்று நாள்களில், சாலைகளில் கேட்பாரின்றி சுற்றித்திரியும் முதியவர்கள், பிச்சைக்காரர்கள் மூன்று பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மாதிரியான மூன்று கொலைகளையும் செய்தது ஒரே ஆள்தானா? கொலையாளிகளின் பின்னணி என்ன? என்று தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. பழைய பேருந்து நிலையம் புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதாலும், வாடகை செலுத்தாததால் வணிக வளாகத்தில் பல கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாலும், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் குறைந்து உள்ளது. இரவு நேரத்தில், வணிக வளாகத்தை சட்ட விரோத கும்பல் மது அருந்தும் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில், வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடையின் வாசலில் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது குறித்து சேலம் மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தின் அருகில் ரத்தம் தோய்ந்த நிலையில் ஒரு கல் கிடந்தது. மர்ம நபர்கள், அந்த முதியவரை கல்லால் அடித்துக் கொன்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
உடற்கூறு ஆய்வுக்காக சடலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலையுண்ட நபர், சேலம் பொன்னம்மாபேட்டை சடகோபன் தெருவைச் சேர்ந்த அங்கமுத்து (85) என்பது தெரிய வந்தது. பழ வியாபாரியான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அங்கமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
மது குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றால் மகன்கள் திட்டுவார்கள் என்பதால், மது குடித்திருக்கும் நாள்களில் பழைய பேருந்து நிலைய வணிக வளாகத்திலேயே படுத்துக் கொள்வாராம். திங்கள்கிழமை (பிப். 3) இரவும் அவர் மதுகுடித்து இருந்ததால், போதை தலைக்கேறிய நிலையில் அவர் வணிக வளாக கடை வாசலிலேயே படுத்துத் தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (இன்று, பிப். 4) அதிகாலையில் நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
வணிக வளாகம் மற்றும் பழைய பேருந்து நிலையம் சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் சூரமங்கலத்தில் திங்கள்கிழமை (பிப். 3) இரவு, பிச்சைக்காரர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார். சம்பவ இடம் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், மர்ம நபர் ஒருவர், அந்த பிச்சைக்காரர் வைத்திருந்த பணத்தை திருடியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் பிச்சைக்காரரை அந்த மர்ம நபர் கல்லால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இதுமட்டுமின்றி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பயணிகள் நிழற்குடைய அருகில் இருந்தும் காதில் ரத்தம் வழிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று (பிப். 2) 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலத்தைக் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆரம்பத்தில் அவர் வாகன விபத்தில் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் உடற்கூறு ஆய்வில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களிலும் கேட்பாரற்று சாலையோரம் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள், முதியவர்களை குறி வைத்து கொலை செய்யப்பட்டிருப்பதும், மூன்று சம்பவங்களிலும் முக்கிய ஆயுதமாக கல் பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் மூலம், இந்த மூன்று கொலைகளையும் ஒரே ஆள் செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் கருதுகின்றனர்.
எனினும் சூரமங்கலம் பகுதியில் பிச்சைக்காரர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மட்டுமே இப்போதைக்கு சந்தேக நபர் குறித்த கேமரா பதிவு காட்சிகள் கிடைத்துள்ளன. மற்ற இரு கொலைகளையும் செய்ததும், சூரமங்கலம் சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபர்தானா அல்லது வேறு வேறு நபர்களா என்பதையும் காவல்துறையினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சேலம் மாநகரில், சாலையில் சுற்றித்திரியும் முதியவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.