ஆத்தூர் அருகே, பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (43). இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். சரியாக வேலைக்குச் செல்லாமல் வழிப்பறி, திருட்டு, கூலிப்படை ரவுடியாக செயல்பட்டு வந்தார்.

அடிக்கடி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர் மீது கடந்த 2011ம் ஆண்டு முதல் ஆத்தூர் காவல்நிலையத்தில் போக்கிரித்தாள் (ஹிஸ்டரி ஷீட்) பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர் காவல்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
சுப்ரமணியத்தின் மூத்த மகளுக்கு 17 வயதாகிறது. அவர் தற்போது, ஆத்தூர் அரசுப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம், வீட்டில் இருந்தபோது சுப்ரமணியம் தனது மூத்த மகளிடம் தவறாக நடக்க முயற்சித்தார். அதையறிந்த அவருடைய மனைவியும், உறவினர்களும் சுப்ரமணியத்தை தடுக்க முயன்றபோது, அவர்களை தாக்கிவிட்டு மகளை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றார். அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தூக்கிச்சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும், இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அப்படிச்சொன்னால் உனது தாய், தங்கையைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இச்சம்பவம் நடந்த ஓரிரு நாளில், பாதிக்கப்பட்ட சிறுமி உள்பட இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு அவருடைய தாய் தலைமறைவாகி விட்டார். அவர்களையும் சுப்ரமணியம் தேடி வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினை தேடி வந்தனர். கடந்த 14ம் தேதி அவர்களை காவல்துறை மீட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின்பேரில், சுப்ரமணியம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர், ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.