
சங்ககிரி அருகே, மர்ம நபர்கள் பால் வியாபாரியின் தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள உப்புபாளையத்தைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. விவசாயி. இவருடைய மகன் ராமசாமி என்கிற சேகர் (43). இவரும் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார். இவர்களுக்கு அதே பகுதியில் 8 ஏக்கர் நிலம் உள்ளது. ராமசாமியின் மனைவி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனியாக சென்றுவிட்டார். அதையடுத்து அவர், பெற்றோருடன் வசித்து வந்தார்.
அவர் வீட்டில் சொந்தமாக கறவை மாடும் வைத்துள்ளார். தினமும் பால் கறந்து, சுற்றுவட்டார பகுதியில் பால் விற்பனை செய்து வந்தார். மார்ச் 3ம் தேதியன்று மாலை வழக்கம்போல் பாலை விற்பனைக்குக் கொண்டு சென்ற ராமசாமி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் சில இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரைப் பற்றிய தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில், மார்ச் 4ம் தேதி காலை, வீட்டின் அருகில் உள்ள அவருடைய தோட்டத்தில் ராமசாமி, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரை தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்துசங்ககிரி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி ரமேஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமசாமிக்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அவருடைய தந்தையிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பெண்கள் விவகாரத்தில் கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)