
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மூத்த சகோதரி பாஞ்சாலி அருகிலுள்ள அழகாபுரியில் வசித்து வந்தார்.
இவர்களுடைய பூர்வீக வீடு செவல்பட்டியில் உள்ளது. இச்சொத்தைப் பிரிப்பதில் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இன்று (3-ஆம் தேதி) பகல் நேரத்தில் அந்த வீட்டின் முன்பாக, இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. வாய்த்தகராறு முற்றியபோது, தன் அக்கா பாஞ்சாலியை அரிவாளால் வெட்டியுள்ளார் ரமேஷ். கழுத்துப் பகுதியில் வெட்டு விழுந்ததால், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் பாஞ்சாலி. தகவல் கிடைத்து, ராஜபாளையம் வடக்கு காவல்நிலையப் போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.