
சிவகங்கை மாவட்டம் மல்லாங்கோட்டை கிராமத்தில் கடந்த 10 வருடங்களாகத் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரி சுமார் 100 அடி ஆழம் கொண்டது ஆகும். இந்த சூழலில் தான் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இன்று (20.05.2025) காலை 6 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென அங்கிருந்த சரலைக் கற்கள் சரிந்து மண் குவாரியில் விழுந்தது.
இதில் 3 பேர் மீது முழுவதுமாக மண் முடியது. இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே சமயம் 3 பேரையும் மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த கணேசன், ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி. செல்வகுமார் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆர். பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “பலி எண்ணிக்கை தற்போது ஆக அதிகரித்திருக்கிறது. இந்த ஐந்து பேரது உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் மேலும் ஒருவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள ஒரு நபரை மீட்பதில் சற்று சிரமம் இருக்கிறது. மீட்புப் பணி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறும். மீட்புப் பணியை மேலும் துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார். கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 5ஆக உயர்ந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.