Skip to main content

நக்கீரன் செய்தி எதிரொலி... கடல் கடந்து தவிக்கும் கணவர்... படிப்பை துறந்த மகன்கள்.. கண்ணீரோடு கோரிக்கை வைத்த மனைவி!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

incident in pudukottai vadakadu

 

போலி முகவரை நம்பி மலேசியா சென்று பாஸ்போர்ட் வரை இழந்து தவிக்கும் கணவரை மீட்கவும், குடும்ப வறுமையைப் போக்க படிப்பைத் துறந்து கூலி வேலைக்குச் செல்லும் மகன்களின் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி கண்ணீர் கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த கோரிக்கை நக்கீரன் இணையத்தில் வீடியோவாக (செப்டம்பர் 24) வியாழக் கிழமை வெளியானது. வெளியான அடுத்த சில நிமிடங்களில் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு சாத்தன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம். தச்சுத் தொழிலாளி. மனைவி மற்றும் 3 மகன்கள். குடும்ப வறுமையைப் போக்க ஆங்காங்கே கடன் வாங்கியவர் அந்தக் கடன்களை அடைக்க மீண்டும் கடன் வாங்கி மலேசியாவுக்குச் சென்றார். சென்ற இடத்தில்தான் தெரிந்தது, தான் ஏமாற்றப்பட்டது. சில மாதங்கள் ஓரளவு சம்பளம் கிடைக்க அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கை தான். தன்னை எப்படியாவது மீட்டுச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று குடும்பத்தினரிடம் கண்ணீர் வடிக்க, மாவட்ட ஆட்சியல் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவரது பாஸ்போர்ட் பறித்து வைத்துக் கொண்டதால் அதற்குப் பதிலாக தற்காலிக பாஸ்போர்ட் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், விமான டிக்கெட், அபராதம் கட்ட பணமின்றி தவித்து வருகிறார் வேலாயுதம்.

இந்த நிலையில், புயலில் வீட்டை இழந்து சின்ன குடிசை போட்டு வாழும் வேலாயுதத்தின் குடும்பத்தினர் அன்றாட உணவுக்கே தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், 3 மகன்களில் 2 பேர் பள்ளி, மற்றும் கல்லூரி படிப்பைத் துறந்து கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். மற்றொரு மகன் மட்டும் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். அவரும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

இந்தநிலையில் தான் அந்த குடும்பம் குறித்து, அதே ஊரைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் விஜயராஜ் மற்றும் ஊடக நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து வேலாயுதம் வீட்டிற்குச் சென்றோம். அப்போது, "மலேசியாவில் தவிக்கும் எனது கணவரை மீட்கவும், கூலி வேலைக்குச் செல்லும் மகன்களின் படிப்பைத் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் உழைப்பில் சாப்பிடும் நிலை வேதனையாக உள்ளது" என்ற வேலாயுதம் மனைவியின் கண்ணீர் கோரிக்கையையும் வீடியோவாகப் பதிவு செய்து நக்கீரன் இணையத்தில் வியாழக்கிழமை மதியம் செய்தியாக வெளியிட்டோம்.

 

Ad

 

நக்கீரன் இணைய செய்தியைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி.. அடுத்த ஒரு மணி நேரத்தில் உடனடியாக வருவாய்த் துறை அதிகாரிகளை அனுப்பி குடும்ப நிலை குறித்த தகவல்களைப் பெற்று நடவடிக்கையைத் தொடங்கி உள்ளார். மேலும் 'மக்கள் பாதை' அமைப்பினரும், மலேசியாவில் உள்ள தன்னார்வலர்களும் நக்கீரன் வீடியோவைப் பார்த்து வேலாயுதத்தை மீட்டுச் சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளனர்.

நடவடிக்கை எடுத்து வரும் அனைவருக்கும், வேலாயுதம் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறி வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.