
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு மகள்கள் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி நகரைச் சேர்ந்தவர் கோயில் பிச்சை. இவரது மனைவி உஷா (50). இந்த தம்பதிக்கு நீனா (23), ரீனா (20) என்ற இரு மகள்கள் உள்ளனர். கோயில் பிச்சை மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டுச் சென்ற நிலையில், உஷா அவரது மகள்களுடன் கே.டி.சி நகரில் வசித்துவந்தார். ஹிந்தி டியூசன் எடுத்துவந்த உஷா, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். உஷாவின் மகள்களான நீனாவும், ரீனாவும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு நீனா, ரீனா இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (20.07.2021) காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது, உஷா ரத்த வெள்ளத்தில் கொலையாகி கிடந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கதவை உடைத்து உள்ளே சென்றபோது உஷாவின் மகள்கள் நீனா, ரீனா கைகளில் ரத்த கறை இருந்தது. மகள்கள் இருவரும் தாய் உஷாவை கம்பு மற்றும் கத்தியைக் கொண்டு தாக்கி, கொலை செய்தது தெரியவந்தது. தாங்கள்தான் அம்மாவைக் கொன்றதாக இருவரும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களை வெளியே அழைத்தபோது வெளியே வர மறுக்க, ஒருவழியாக பேசி, சமாதானப்படுத்தி இருவரும் வெளியே கொண்டுவரப்பட்டனர்.
இருவரும் தாயைக் கொன்றுவிட்டு பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். அதேபோல் போலீசார் கூட்டி செல்கையில் மூத்த மகளான நீனா, தங்கைக்குப் பிஸ்கட் ஊட்டியுள்ளார். இந்த அளவிற்கு இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரையும் மனநல சிகிச்சைக்காக போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாய் உஷாவின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்குப் போலீசார் அனுப்பிவைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களால் தாய் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.