தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ரமேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி (14.01.2025) மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து ரமேஷ் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். அப்போது ரமேஷ் காவலர்களுடன் ஆபாசமான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனால் ஈடுபட்ட ரமேஷ் மீது அங்கிருந்த காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தத் தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அப்துல்ஹியா மற்றும் காவலர்கள் மாரிச்சாமி,பாண்டி உள்ளிட்ட காவலர்கள் தேனி ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.