சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்தரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் அஜித்குமாரை சுற்றி நின்று தாக்குவதைக் கோவிலின் கழிவறையிலிருந்து இளைஞர் ஒருவர் எடுத்த வீடியோ காட்சி நீதிமன்றத்தில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ காட்சி இந்த வழக்கில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்தது. 

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுப்படி மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர் நேற்று (02.07.2025) வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கினார். முன்னதாக வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் என்பவர் தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் ராஜா பல ரவுடிகளுடன் தொடர்புடையவர். கடந்த 28ஆம் தேதி ராஜா தன்னை மிரட்டியுள்ளார். எனவே எனக்கும் என் குடும்பத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். அஜித்குமாரை நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காகக் காவலர்கள் அழைத்துச் சென்று மடப்புரம் கோவில் பின்புறம் வைத்துத் தாக்கியது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 

அதோடு இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதியிடம் கடந்த 2 நாட்களாகத் தனது சாட்சி வாக்குமூலத்தையும் அளித்திருந்தார். இந்நிலையில் தென் மண்டல ஐஜி உத்தரவின் பெயரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 2 காவலர்கள் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த காவலர்கள் இருவரும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என ராமநாதபுரம் சிவகங்கை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சியங்கள் அளித்து வருபவர்களுக்கு உரியப் பாதுகாப்பு வேண்டும் எனவும் காவலர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நிலையில் தங்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சத்தீஸ்வரன் போலீசில் பாதுகாப்பு கேட்டிருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.