புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த கண்ணன் (வயது 32) மற்றும் அவரது சகோதரர் கார்த்தி (வயது 28) ஆகியோர் நேற்று (24.07.2025) இரவு அங்குள்ள குளக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஒன்று கும்பல் இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆவடையார்கோவிலில் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் கொடூரமாக வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைக்கு முன்விரோதம் காரணமா? என்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அண்ணன் தம்பி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதோடு அங்கிருந்தவர்கள் கலைந்து போகவும் அறிவுறுத்தினர். அப்போது இந்த படுகொலைக்குக் காணமான கொலையாளிகளை விரைந்து கைது செய்யக் கோரிக்கை விடுத்தனர்.