incident in nellai

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ பிரதீப் மற்றும் போலீசார், கரோனா வாகன சோதனையின் பொருட்டு நாங்குநேரி-மூலக்கரைப்பட்டிச் சாலையில் வாகனச் சோதனையிலிருந்தனர். அது சமயம் திசையன்விளையிலிருந்து தார் பாய் போர்த்தி மூடப்பட்ட கனரக லாரி ஒன்று அந்த வழியாக வந்ததை நிறுத்திச் சோதனையிட்டிருக்கிறார்கள். அதில் தடை செய்யப்பட்ட தாது மணல் இருப்பதும், அது உரிய ஆவணங்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்திருக்கிறது. மேலும் விசாரணையில்,திசையன்விளை அருகேயுள்ள குட்டம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆலையிலிருந்து தரம் பிரிக்கப்பட்ட தாது மணல் 30 டன் எடையுள்ளது, தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சங்கராபேரியிலுள்ள தனியார் குடோனுக்குக் கொண்டு செல்லும் வழியில் போலீசார் வசம் சிக்கியிருக்கிறது.

Advertisment

30 டன் சிலிக்கான் தாது மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அதன் டிரைவர் தூத்துக்குடியின் நாகராஜ் அவரது மகன் முத்துக்குமார் இருவரையும் கைது செய்தனர்.

Advertisment

கடத்தப்பட்ட இந்த தாது மணல் இந்திய அரசின் அணுசக்தி துறையால் 2017 அக்டோபரில் தடை செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டத்தின் உவரி, ராதாபுரம், தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட கடற்கரையோரம் அரிதிலும் அரிதாகக் கிடைக்கிற தாது மணல் அனுமதிக்கப்பட்டத்தையும் மீறி பல கோடி மதிப்புள்ளது வெட்டி எடுக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவரவே அதனை வெட்டி எடுக்கவும் ஏற்றுமதி செய்யவும் தடை விதித்தது இந்திய அணுசக்தி துறை. மேலும் 1 கிலோ தாது மணல் வெட்டி எடுத்தால் கூட கடுமையான சிறை தண்டனை எனஅவசரச் சட்டமும் பிறப்பித்தது அத்துறை.

இந்த நிலையில் பல கோடி மதிப்புமிக்க தாதுமணல் லாரியில் கடத்தப்பட்டது இலுமினைட்டா, சிலிக்கானா, ரூட்டெய்லா அல்லது யுரேனியமா என்பது ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என்கிறார்கள்.

Advertisment

இதனிடையே பிடிபட்ட தாது மணல் லாரியை சிலர் கடத்த முயற்சிப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்குக் கிடைக்கவே, துரிதமாகச் செயல்பட்ட மாவட்ட எஸ்.பி.யான மணிவண்ணன் அந்த லாரிக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ததுடன் பிடிபட்ட இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்திருக்கிறார்.