
ஊர்க்கட்டுப்பாடு என்ற கரோனா போன்ற கொடிய அபராதத்தை விதித்ததுமில்லாமல் அதனைக் கட்ட மறுத்த முன்னாள் நாட்டாமையின் தம்பி அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்.
நெல்லை மாவட்டத்தின் அம்பைக் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கவுதமபுரியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ரவி அதன் முன்னாள் நாட்டாமைப் பொறுப்பிலிருந்தவர். இவரது தம்பி மதியழகன். ரவியின் மகள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அதே கிராமத்தின் வாலிபர் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதால் ரவி, தன் மகளை வீட்டோடு சேர்க்கவில்லை.
தவிர இது போன்ற சம்பவங்கள் கிராமத்தில் நடந்துவிட்டால் அந்தக் குடும்பத்திற்கு ஊர்க் கமிட்டியின் மூலமாக 1,500 ரூபாய் அபராதம் விதித்து விடுவார்களாம். ஊர் நாட்டாமையான ராஜகோபாலின் தலைமையிலான ஊர்க்கமிட்டி அதைத்தான் செய்திருக்கிறது.

இந்த அபராதத் தொகையை நான் செலுத்த முடியாது. என் மகள் என் வார்த்தையை மீறி சென்றுவிட்டாள். என்று மறுத்திருக்கிறார் ரவி. இதனால் ரவி மற்றும் அவரது தம்பி மதியழகன் குடும்பத்தினரிடமும் ஆண்டுக் கிராம வரியை வசூலிக்காமல் இருந்திருக்கின்றனர். இதனால் ஊர்க் கமிட்டிக்கும், ரவியின் குடும்பத்தாருக்கும் விரோதம் ஏற்ப்பட்டதால், இந்த இரண்டு குடும்பங்களையும், கிராமக்கமிட்டி ஊர் தள்ளி ஒதுக்கி வைத்துவிடடது. இதன் காரணமாக அந்தக் குடும்பங்கள் பெரும் இன்னல்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்குக் குழந்தை பிறக்கவே ரவி தனது மகளையும், மருமகனையும் வீட்டோடு சேர்த்துக் கொண்டார். அதனையடுத்து ஊர்க்கமிட்டிக்குச் செலுத்த வேண்டிய 1,500 ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்தியிருக்கிறார்.
ஆனால் ஊர் நாட்டாமையும் நீங்கள் காலதாமதமாகக் கட்டியதைச் சொல்லி அதற்கு அபராதமாக ஒரு லட்சம் விதித்துக் கட்டச் சொல்லிக் கட்டாயப் படுத்தியிருக்கிறார். ஆனால் ரவியும் மதியழகன் குடும்பத்தார்களும் இதனை ஏற்கவில்லை.
முன்விரோதங்கள் இப்படி இருக்க நேற்று முன்தினம் இரவு ரவியும், அவரது தம்பி மதியழகனும், அம்பையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் கவுதமபுரி திரும்பியிருக்கின்றனர். மதியழகன் பைக்கை ஓட்டி வந்திருக்கிறார். ஊரின் நுழைவுப் பகுதிக்கு வந்த இவர்களை இருளில் மறைந்திருந்த 10 பேர்கள் கொண்ட கும்பல் ஒன்று பைக்கை வழிமறித்து மதியழகனையும், ரவியையும் கம்பு இரும்பு ராடுகளால் மூர்க்கத் தனமாகத் தாக்கியிருக்கின்றனர். சப்தம் கேட்டு அந்தக் கும்பல் தப்பியோட, வழியில் வந்தவர்கள் அவர்களை மீட்டு 108-இல் பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் உயிரிழந்தார். ரவிக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அம்பை காவல் எஸ்.ஐ.யான சோனியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியவர் ஊர் நாட்டாமை ராஜகோபால் உள்ளிட்ட 10 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்.
கிராமத்தின் கொடிய அபராதத் தொகையை கட்டமறுத்ததால் நடந்த இந்தக் கொலை பாதகம் நெல்லை மாவட்டத்தை அதிர வைத்திருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
