Skip to main content

டாஸ்மாக் கடை அருகே வாலிபர் கொலை; நீதிமன்றத்தில் சரணடைந்த இருவர்

 

nn

 

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(29). இவர், நேற்று முன்தினம் ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் காந்தி நகர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜின்னா(30) தலைமையிலான 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மது குடித்து கொண்டிருந்தனர். சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதில் ஆத்திரமடைந்த ஜின்னா, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதனால் சந்தோஷ் நிலைகுலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்தோஷ் இறந்ததை உறுதி செய்தபின் ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 டூவீலரில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர். கொலையான சந்தோஷ்  மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சோமசுந்தரம், முருகன், தெய்வராணி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தோஷை கொலை செய்த ஜின்னா, ஈரோடு கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

 

இந்நிலையில் சரணடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !