1_1.jpg

Advertisment

கொடுத்த கடனைத் திருப்பி கேட்டதற்காக குடும்பத்தையே கரோனா டெஸ்ட் என்ற பெயரில் நூதன முறையில் கொலை செய்யும் சம்பவத்தில் கடன் வாங்கிய நபர் ஈடுபட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது கே.ஜி.வலசு. இங்குள்ள பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் 75 வயது கருப்பண கவுண்டர், விவசாயி. இவருடைய மனைவி 58 வயது மல்லிகா. இவர்களுடைய மகள் 30 வயது தீபா. தீபாவுக்கு திருமணமாகி கணவர் பிரபு என்பவருடன் அவரது தந்தை வீட்டிலேயே வசித்துவருகிறார். இவர்களுக்கு 4 வயது லோகித் என்ற மகனும், ஒரு வயது லட்சிதா என்ற மகளும் உள்ளனர்.

இவர்கள் வசிக்கும் தோட்டத்து வீடு பெருமாள்மலை பகுதியில் தனியாக உள்ளது. நேற்று(27.06.2021)காலையில் தீபாவின் கணவர் பிரபு வேலை விஷயமாக சென்னிமலைக்குச் சென்றுவிட்டார். அப்போது வீட்டில் கருப்பண கவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா மற்றும் இரு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். இவர்களுடன் தோட்டத்தில் வேலை செய்யும் 65 வயது குப்பம்மாள் என்ற பெண்ணும் பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த 43 வயது கல்யாண சுந்தரம் ஆகியோரும் இருந்துள்ளனர். அப்போது காலை 8 மணியளவில் சுமார் 25 வயதுடைய வாலிபர் ஒருவர் அங்கு வந்து, “கருப்பண கவுண்டர் வீடு இதுதானே” என்று கேட்டுள்ளார். அதற்கு வீட்டில் இருந்தவர்கள் “ஆமாம்” என கூறியுள்ளனர்.

Advertisment

அப்போது அந்த வாலிபர், “இந்தப் பகுதியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பஞ்சாயத்து நிர்வாகம் என்னை அனுப்பியுள்ளது. அதனால் நான் உங்களைக் கரோனா பரிசோதனை செய்ய வந்துள்ளேன். பரிசோதனை செய்வதற்கு முன் நீங்கள் அனைவரும் மாத்திரை சாப்பிட வேண்டும். அதற்கு முதலில் வெந்நீர் கொண்டு வாருங்கள்” என கூறியுள்ளார்.

இதைக் கேட்டு தீபா உடனடியாக வெந்நீர் தயார் செய்துகொண்டு வந்துள்ளார். அப்போது அந்த வாலிபர், “முதலில் இந்த மாத்திரைகளை அனைவரும் சாப்பிடுங்கள். அதன்பிறகு உங்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். இதைக் கேட்டு அந்த வாலிபர் கொடுத்த கருப்பு நிறத்தில் இருந்த மாத்திரைகளை கருப்பண கவுண்டர், அவரது மனைவி மல்லிகா, மகள் தீபா, வேலை செய்யும் பெண் குப்பம்மாள் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.

ஆனால் அங்கிருந்த கல்யாணசுந்தரம் என்பவர், “நான் ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்துள்ளதால் எனக்கு வேண்டாம்” என கூறியுள்ளார். பின்னர் மாத்திரை சாப்பிட்ட நால்வரையும் ஒரு கருவி மூலம் பரிசோதனை செய்து உங்கள் யாருக்கும் கரோனா இல்லை என கூறிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்.

Advertisment

2_1.jpg

அந்த வாலிபர் சென்ற சிறிது நேரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தீபா தனது கணவர் பிரபுவுக்கு ஃபோன் செய்து இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக பிரபு வீட்டுக்கு விரைந்து சென்று மயக்கத்தில் இருந்த 4 பேரையும் தனது கார் மூலம் சென்னிமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.குப்பம்மாள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இறந்துவிட்டார். கருப்பண கவுண்டரும் அவரது மகள் தீபாவும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். நல்லவேளையாக குழந்தைகள் இருவருக்கும் மாத்திரை கொடுக்காததால் அவர்கள் தப்பித்தனர்.

3_1.jpg

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், ஈரோட்டில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சம்பவ வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னிமலை - கே.ஜி.வலசு ரோடுவரை ஓடிவிட்டு மீண்டும் வீட்டுக்கே திரும்ப வந்தது.

மாத்திரை கொடுக்க வந்த மர்ம நபர் அந்த வீட்டிற்குள் நுழையும்போதே வீட்டின் உரிமையாளர் பெயரைச் சொல்லி விசாரித்ததையும், கரோனா பரிசோதனை செய்ததற்கு பணம் எதுவும் வாங்காமல் சென்றதைப் பார்க்கும்போது முன்கூட்டியே திட்டமிட்டு யாராவது இந்தச் செயலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இந்த நிலையில் இன்று போலீஸ் விசாரணையில் கருப்பன கவுண்டரிடம் கடனாக 6 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய கல்யாணசுந்தரம், வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுக்காமல் இருக்க அவரது குடும்பத்தையே கொலை செய்ய முடிவுசெய்து இப்படி கரோனா டெஸ்ட் என்ற வினோத முறையில் இச்செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்யாணசுந்தரம் உட்பட இருவரை கைதுசெய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.