
திருவண்ணாமலை நகரம் போளூர் சாலையில் உள்ள துரைராஜ் நகரில் வசிப்பவர் கலாவதி. இவரது கணவர் கோவிந்தராஜ். கலாவதி திருவண்ணாமலை ஒன்றிய செயலாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போளூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கடந்த வியாழக்கிழமை போந்தை கிராமத்திலுள்ள விவசாய நிலத்தைப் பார்க்க கலாவதி குடும்பத்தோடு சென்று உள்ளார். டிசம்பர் 11ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த இருபத்தி எட்டு சவரன் நகைகளைக் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டு உரிமையாளர் கலைச்செல்வி, கணவர் பெயர் சுப்பிரமணி. அவர்கள் குடும்பத்தோடு சென்னை சென்று உள்ளார்கள். அவர்கள் வீட்டில் 2000 ரூபாய் பணமும் ஒரு சவரன் தங்க நகரையும் திருடு போய் இருக்கிறது.

இரு குடும்பத்தாரும் டிசம்பர் 12ஆம் தேதி ஊருக்குத் திரும்பி வந்துள்ளார்கள். கதவு உடைக்கப்பட்டு பொருள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து இரு குடும்பத்தாரும் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடங்களுக்கு வந்த காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். இரு குடும்பத்தாரும் தந்த புகார்களை வாங்கி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஒரே தெருவில் அடுத்தடுத்து திருடர்கள் வந்து கைவரிசை காட்டியிருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Follow Us