மேச்சேரி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி சிறுவர்கள் 3 பேர் உயிரிழப்பு! 

incident in mecherry lake

மேச்சேரி அருகே, பள்ளி சிறுவர்கள் மூன்று பேர் ஏரியில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்துள்ள புக்கம்பட்டியில் நாகிரெட்டிப்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி, சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேச்சேரி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரி, ஏற்கனவே குடிமராமத்து செய்யப்பட்டுள்ளதால் ஏரியின் உட்பகுதியில் பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மழை நீர் அதிகளவில் தேங்கியுள்ளது.

இந்நிலையில், ஆக. 11ம் தேதி, புக்கம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன்கள் ஹரீஷ் (17), ரித்தீஷ் (16) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகன் அகுல் என்கிற தர்ஷன் (15) ஆகிய மூன்று பேரும் நாகிரெட்டிப்பட்டி ஏரியில் குளிக்கசென்றனர். நீண்ட காலத்திற்குபிறகு ஏரியில் நீர் தேங்கியுள்ளதால் அவர்கள் குதூலகமாக குதித்து மகிழ்ந்தனர். திடீரென்று அவர்கள் ஏரியின் ஒரு பகுதியில் சேற்றில் சிக்கிக்கொண்டு கரைக்கு வர முடியாமல் திணறினர். உயிருக்குபோராடிய அவர்கள் காப்பாற்றுமாறு கத்தி கூச்சல் போட்டனர்.

சிறுவர்களின் அபயக்குரலைக் கேட்டு அந்த வழியாகசென்றவர்கள், கிராம மக்கள் சிலரும் ஏரியில் குதித்து சிறுவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் நீரில் மூழ்கினர். அவர்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தபோது, மூன்று பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

lake

இதுகுறித்து தகவல் அறிந்த மேச்சேரி காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் சடலங்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களில் ஹரீஷ் 10ம் வகுப்பும், ரித்தீஷ் மற்றும் தர்ஷன் ஆகியோர் 9ம் வகுப்பும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏரிகள், குவாரிகள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பெரியவர்களின் துணையின்றி நீச்சல் தெரியாத சிறுவர்கள் குளிக்கசெல்வதைதவிர்க்க வேண்டும்.

incident mecheri
இதையும் படியுங்கள்
Subscribe