
மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயல்கையில், கணவர் விபத்தில் சிக்கிய சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த மருத்துவர் கோகுல் குமார் என்பவருக்கும் மதுராந்தகத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுராந்தகத்தில் உள்ள மாமனார் வீட்டிற்குத் திடீரென சென்ற கோகுல்குமார், அங்கு தங்கியிருந்த கீர்த்தனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தில் குத்திய கோகுல்குமார், தடுக்க வந்த கீர்த்தனாவின் தந்தையையும் தாக்கியுள்ளார்.

கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதால் காயமடைந்த கீர்த்தனா வீட்டுக்கு வெளியே பதறி ஓடி வந்த நிலையில், தன் காரைக் கொண்டு ஏற்றி கீர்த்தனாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து கோகுல்குமார் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது காரை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்ற அவர், அச்சரப்பாக்கம் என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். விபத்தில் இருந்து மீட்கப்பட்ட கோகுல்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயல்ககையில் கணவர் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.