ADVERTISEMENT

கோஷ்டி தகராறில் வாலிபர் உயிரிழப்பு... போலீஸ் குவிப்பு!

03:50 PM Jun 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் 45 வயது தங்கராஜ். கட்டிட மேஸ்திரியான இவர் கரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அபின் என்கிற ராமதேவ் (வயது 27) என்ற இளைஞர் நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்துள்ளார். இரு தரப்பினரும் அப்போது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றி திடீரென இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இருதரப்பினரையும் பிரச்சனை வேண்டாம் ஒரே ஊரில் வசிக்கும் உங்களுக்கு எதற்கு சண்டை சச்சரவு என்று கூறி இரு தரப்பினரையும் ஒதுக்கிவிட்டுள்ளனர். இதையடுத்து தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட அவரவர் வீடுகளுக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு தனது நண்பர்களுடன் தங்கராஜ் குடியிருந்த பகுதிக்குச் சென்ற ராம்தேவ் மற்றும் அவரது நண்பர்கள் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்களிடம் மீண்டும் தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் மீண்டும் தடி இரும்பு போன்ற ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்த மோதலில் ராம்தேவ் தங்கராஜ் ஆறுமுகம் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கலவரம் நடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த ராம்தேவ் மற்றும் ஆறுமுகத்தை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆறுமுகம் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். ஆனால் தலையில் பலத்த காயம் அடைந்த ராம்தேவ் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ராம்தேவ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரு தரப்பினரும் மரக்காணம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தங்கராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுகம், ஐயப்பன், செந்தில், ஏகாம்பரம். அதேபோல் ராம்தேவ் நண்பர்கள் பூவரசன். ஆகாஷ் உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் ராம்தேவ் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால். கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT