Incident of making a student sit alone Case registered against 3 people

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செங்குட்டுபாளையம் கிராமத்தில் சித்பவானந்தா என்ற தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர் வகுப்பறைக்கு வெளியே அமர்ந்தபடி தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் ஏன் வெளியே அமர்ந்திருக்கிறாய் என கேட்டதற்கு தனக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் வெளியே அமர வைத்து தேர்வு எழுத பணிக்கப்பட்டதாக மாணவி தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தாத்தா இது குறித்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட மாணவி பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், பூப்பெய்திய காரணத்தால் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்டது தீண்டாமை குற்றம் என புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். அதோடு பள்ளித் தரப்பிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதே சமயம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்திருந்தார். மேலும் மாதவிடாய் காரணத்திற்காக மாணவிகளை தனியாக அமர்த்தக்கூடாது என்ற அறிவுறுத்தலை தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் தங்கவேல் பாண்டியன், உதவி தாளாளர் ஆனந்தி மற்றும் உதவியாளர் சாந்தி ஆகிய 3 பேர் மீது நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.