Skip to main content

பாலியல் புகார் கொடுத்த மாணவிகள் மீது வழக்கு... மதுரை ஆட்சியரிடம் மாணவி தஞ்சம்!!

 

INCIDENT IN MADURAI

 

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுக்க நின்றுகொண்டிருந்த அந்த மாணவி ''சார் தொலைதூரக் கல்வியில் கல்லூரி படிப்பைப் படிக்கிறேன். கரோனாவால் வீட்டில் சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டபட்ட நிலையில் ஏதாவது வேலைக்குச் சென்றால் கஷ்டம் நீங்கும் என்று எனக்குத் தெரிந்த தோழியிடம் உதவும்படி கேட்டேன். அவளும் பல்லடம் அருகில் உள்ள பிரபல ஆடை உற்பத்தித் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். அங்கு தங்கி பணிபுரிந்து வந்தேன். அங்கு எனக்கு மேலதிகாரியான, எனது மேனேஜர் சிவக்குமார் என்னை அடிக்கடி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார். நான் மறுக்கவே புகைப்படங்களில் மார்ஃபிங் செய்து என்னை மிரட்டி, ஆபாச வார்த்தைகள் பேசினார். பின்னர் நான் சொல்லும் இடத்திற்கு வந்தால் மட்டுமே உனது புகைப்படம் உனக்குக் கிடைக்கும் என்றும், இல்லையெனில் சோசியல் மீடியாவில் வெளியிட்டு உன்னை அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் என்னை மிரட்டினார்.

பின்னர், நன்கு யோசித்து அவர் சொன்ன இடத்திற்குச் சென்று படத்தை வாங்கி வரலாம் என்று முடிவுசெய்தேன். எனக்குத் துணையாக எனது தோழியும் வருவதாகக் கூறினார். இருவரும் அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முன், எங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பெப்பர் ஸ்ப்ரே, மிளகாய்த் தூள், கயிறு போன்ற சில பொருட்களை வாங்கி எனது பையில் வைத்துச் சென்றோம். பின்னர் அங்கு வந்த அவரிடம் புகைப்படத்தைத் தருமாறு கேட்டேன். நான் உன்னை மட்டும் தனியாகத் தானே வரச் சொன்னேன் என்று இருவருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்தது.

இந்தநிலையில், திடீரென்று எங்கள் மீது கைவைத்துத் தவறான முறையில் நடந்துகொண்டார். நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள கையில் வைத்திருந்த மிளகாய்த்தூளை முகத்தில் பூசி, கையையும் காலையும் கட்டி பின் பல்லடம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அங்கு வந்த காவல்துறையினர் நாங்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்தனர்.

பின்னர், சிவகுமாரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பின் எங்களையும் அன்றிரவு காவல் நிலைத்தில் வைத்து நடந்த விவரங்களை விசாரித்தனர். பின், அங்கு வந்த பெண் காவல்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் கோமதி எங்களிடம் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். பின்னர், எனது தோழி ஒரு இஸ்லாமியப் பெண் என்பதால் அவளை, அவளது மதத்தை அசிங்கப்படுத்தும் வகையில் பேசியதோடு, கைநீட்டி அடித்து பின்னர் இரவில் பெண்கள் இருவரும் காவல் நிலையத்தில் தங்கக் கூடாது என்பதற்காக எங்களைக் காலையில் வரச்சொன்னார்கள்.

மறுநாள் காலையில் நாங்கள் சென்றபோது, எங்களை ஒரு அறைக்குள் அமரவைத்து எங்களிடம் துணை அதிகாரி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு விசாரணை நடத்தினார். பின்னர் சிவகுமார் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பதாகச் சொல்லி எங்களிடம் புகார் காப்பியைக் கொடுத்தார்கள். அதில் நாங்கள் அளித்த புகாருக்குப் பதிலாக வேறு ஒரு புகார் நிரப்பப்பட்டிருந்தது. அதில் எங்களைக் கையொப்பமிடச் சொன்னார்கள். நாங்கள் படித்த பிறகு, இது நாங்கள் அளித்த புகார் இல்லை என்று கூற, எங்களை மிரட்டி அந்தப் படிவத்தில் கையொப்பமிடச் செய்தனர்.

பின்னர், எதுவுமே எழுதப்படாத காகிதத்தில் எங்கள் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டனர். அதன்பிறகு, தான் எங்களுக்கும் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது தெரியவந்தது. பின்னர் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்று வாசலில் வைத்து, அவர் என்ன சொன்னாலும் சரி என்று தலையாட்ட வேண்டும் என்று மிரட்டினார்கள். பின்னர், எங்களிடம் நீதிபதியும் எதுவுமே முழுமையாக விசாரிக்காமல் எங்களை 15 நாட்களுக்கு காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

Ad


பின்னர், நானும் எனது தோழியும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தோம். 15 நாட்களுக்கு பல்லடம் காவல் நிலைத்தில் கையொப்பமிடச் சொன்னார்கள். நானும் முதல் இரண்டு நாள் கையப்பமிட்டேன். பின்னர் மூன்றாவது நாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் காது வலியால் இரத்தம் வடிந்ததால், சிறிது கால தாமதமாகச் சென்ற எங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் பணத்தைத்  தருகிறோம் என்று என்னை அழ வைத்துச் சித்திரவதைச் செய்தார்கள்.

பின்னர், என்னை சிவக்குமார் ஆள்வைத்து அடித்து என்னை காவல் நிலையத்திற்குச் செல்ல விடாமல் தடுத்தார். மேலும் எங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்குக் கூட அச்சமாக இருக்கிறது. அதனால் எங்களை இந்த கொடுமையில் இருந்து காப்பாற்றும் படியும், எங்களை இத்தகைய கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் அனைவரின் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை ஆட்சியரிடம் அடைக்கலம் கேட்டு வந்துள்ளோம். எனக்கும் என் தோழிக்கும் கொலை மிரட்டல் உள்ளது. எங்களைக் காப்பாற்றுங்கள்'' என்றார். அதற்கு கலெக்டர் ''இனி நீங்கள் கையெழுத்துப் போட காவல் நிலையம் செல்ல வேண்டாம். மேலும், தர்மபுரி ஆட்சியருக்குத் தகவல் கொடுத்துள்ளேன். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்'' என்று கூறிவுள்ளார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்