The incident of the lose their live of a child who fell from a running bus; Action taken against the driver, operator

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் வேப்பிலை முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவையில் குடும்பத்துடன் வசித்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார். கடந்த வாரம் சொந்த ஊருக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்று தங்கிவிட்டு மீண்டும் கோயம்புத்தூருக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார்.

பேருந்தின் படிக்கட்டு அருகில் உள்ள இருக்கையில் குழந்தை உடன் பயணித்துள்ளனர். பேருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சென்றபோது பேருந்தின் முன்பக்க கதவு திறந்துள்ளது. அதை மூடும்படி ராஜதுரை கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஓட்டுநர், நடத்துநர் கதவை மூடவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் திடீரென ஓட்டுநர் பிரேக் அடித்ததில் தந்தை ராஜதுரை தோளில் இருந்த குழந்தை தவறி பேருந்தின் முன் வழியாக விழுந்துள்ளது.

Advertisment

உடனடியாக குழந்தையை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் கவனக்குறைவே காரணம் என குழந்தையின் தந்தை ராஜதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் அலட்சியமாக செயல்பட்டதாக ஓட்டுநர் சிவமணி, நடத்துநர் பழனிசாமி ஆகியோரை கோவை மண்டல போக்குவரத்து மேலாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக தேவூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.