Skip to main content

திமுக வேனில் சென்று அதிமுகவிற்கு வாக்களித்து துணை சேர்மன் ஆன காங்கிரஸ் வேட்பாளர்!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

புதுக்கோட்டை மாவட்டக்குழு தலைவர் பதவிக்கு 13 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தி.மு.க கூட்டணிதான் வெற்றி பெறும் என்று அனைவரின் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால் ஆளும் அதிமுக 9 இடங்களை மட்டுமே பிடித்திருந்ததால் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்ற நிலையில் திமுக தில்லாக இருந்தது.

திமுக மாவட்ட சேர்மன் வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியான நிலையில் கலைவாணி சுப்பிரமணியன் வேட்பாளராக திமுக கட்சி அறிவித்தது.

 

pudukottai


காலை தலைவர் தேர்தலுக்கு 11 திமுக கவுன்சிலர்கள், 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஒரு வேனில் மொத்தமாக வந்து இறங்கி உள்ளே சென்றனர். அதேபோல அதிமுக தரப்பில் 8 அதிமுக கவுன்சிலர்கள் ஒரு த.மா.கா கவுன்சிலர் என 9 பேர் ஒன்றாக வந்தனர். திமுக சார்பில் கலைவாணியும், அதிமுக சார்பில் ஜெயலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

வாக்கெடுப்பு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 9 வாக்குகளுடன் இருந்த அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜெயலெட்சுமி 12 வாக்குகளும், 13 வாக்குகள் வைத்திருந்த திமுக கலைவாணி 10 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
குறைவான வாக்குகள் இருந்த அதிமுக மாவட்டசேர்மன் பதவியை பிடித்தது.

 

pudukottai


மாலையைில் அதேபோல துணைத் தலைவர் தேர்தல் நடந்த போதும் ஒன்றாகவே வந்தனர். திமுக சார்பில் துணைத் தலைவருக்கும் சேர்மன் வேட்பாளராக போட்டியிட்ட கலைவாணியே மனு தாக்கல் செய்ய.. அடுத்த நிமிடம் திமுக கூட்டணி கவுன்சிலர்களுடன் வந்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் உமாமகேஸ்வரியும் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த போது திமுகவினருக்கு அதிர்ச்சி. வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டபோது 11 – 11 என சமநிலை வந்தது. 

குலுக்கல் முறையில் காங்கிரஸ் கட்சியின் உமாமகேஸ்வரி துணைத் தலைவர் ஆனார். திமுகவில் தொடர்ந்து மாவட்டத் துணைத்தலைவர் பதவி கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டனர். அதேபோல திருவரங்குளம் ஒன்றியத்தில் அதிக இடங்களை வென்று கொடுத்த ஒ.செ. தரப்பை வேட்பாளர் ஆக்காமல் தி.மு.க மாவட்ட நிர்வாகம் ஒருதலைப் பட்சமாக வேட்பாளர் ஆக்கியதால் காங்கிரஸ் உமாமகேஸ்வரி தரப்பிற்கு திமுக மீது கடும் கோபம். தாங்கள் சார்ந்துள்ள இனத்திற்கு திமுக தொடர்ந்து துரோகம் செய்வதாக கூட்டணிக்குள் பேசிக் கொண்டனர்.

 

pudukottai


இதை அறிந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்து காங்கிரஸ் கவுன்சிலர்களிடம் பேசியதுடன், ஒரு திமுக கவுன்சிலரையும் ரகசியமாக பேசி முடித்து வைத்துவிட்டு வேட்பாளரையும் தேர்வு செய்து அனுப்பி வைத்தார். சத்தமில்லாமல் திமுக வேனிலேயே சென்ற அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்ததுடன் அவர்கள் தயவில் துணைத் தலைவரும் ஆகிவிட்டார் காங்கிரஸ் உமா மகேஸ்வரி. வெற்றிக்கு பிறகு அதிமுகவினருடன் சென்று தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர்.

இதை அரசியலில் மாற்றங்கள் எப்படி வேண்டுமானாலும் நிகழும் என்று சொல்லிவிட்டு செல்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களின் தபால் ஓட்டுகளில் குளறுபடி - 50% வாக்குகள் தேக்கம்? திட்டமிட்டு நடக்கிறதா?

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Confusion in the postal ballots of teachers on election duty- 50% of votes stagnated? Is it going as planned?


தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் பரபரப்பான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பக்கம் வாக்குப் பதிவிற்கான ஆயத்தப்பணிகளைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதேபோல 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் கோடிக்கணக்கில் செலவழித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேவையான 3 கட்ட பயிற்சி வகுப்புகளும் இன்றோடு முடிந்துவிட்டது.

இந்தநிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு தேவையான வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டு பயிற்சி மையத்திலேயே வாக்களிக்கவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே தேர்தல் பணி பயிற்சியில் இருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இன்று 3 வது கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தபோது அஞ்சல் வாக்குப்பதிவும் நடந்துள்ளது. பயிற்சியில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த சனிக்கிழமை மாலை 3 மணிக்கே கடைசி நாள் என்பதால் அஞ்சல் வாக்குச் சீட்டுகளை பெறச் சென்றபோது ஒவ்வொரு பயிற்சி மையத்திலும் சுமார் 50% பேருக்கு வாக்குச் சீட்டுகள் இல்லை. மேலும் தனித்தனி அறைகளில் வாக்குப்பதிவுகள் நடத்தாமல் ஒரே அறையில் வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொதிப்படைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர், திருமயம், ஆலங்குடி உட்பட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் உள்ளது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்து அனைவரும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பயிற்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கூறும் போது, தபால் வாக்குகளில் புதுமையைப் புகுத்துவதாக நினைத்து பல மையங்களில் 50% முதல் 70% பேருக்கு வாக்குரிமையை இல்லாமல் பறித்துள்ளனர். இன்றே கடைசி நாள் என்று சொல்லிவிட்டு 27% பேருக்கு மட்டும் வாக்குச்சீட்டு கொடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு செய்கிறது ஆனால் தேர்தல் பணியில் உள்ள எங்கள் வாக்கு உரிமையைப் பறிப்பது சரியா? நாங்கள் 18 ஆம் தேதியே தேர்தல் பணிக்கு போக வேண்டும் ஆனால், வாக்களிக்காமல் எப்படி நாங்கள் நிம்மதியாக வாக்குச்சாவடிக்குள் பணி செய்ய முடியும். பலரும் பல வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம். எங்களுக்கான வாக்குரிமை பறிக்கப்பட்டால் நாங்கள் எங்களுக்கான வாக்குச் சாவடிக்கு வாக்களிக்கத் தான் போவோமே தவிர தேர்தல் பணிக்கு போகமாட்டோம். இது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமோ என்று நினைக்கிறோம். அதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 12 முதல் 15 ஆயிரம் பேர் தேர்தல் வாக்குப்பதிவு மையங்களில் பணியில் ஈடுபடுகிறோம் இத்தனை ஓட்டுகளும் வேட்பாளர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் ஓட்டுகளாக உள்ளதால் வேண்டுமென்றே இந்தச் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும் , புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடந்த 3 ஆம் கட்ட பயிற்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக 6 இடங்களில் பயிற்சிகள் நடந்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் 25 முதல் 30 அறைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே பயிற்சிக்கு அனுப்பி இருந்தார்கள். அந்த இயந்திரங்களை எப்படி கையாளுவது என்று கூட பயிற்சி அளிக்கப்படவில்லை. பிறகு எப்படி வாக்குப்பதிவு மையங்களில் நாங்கள் இயந்திரங்களைக் கையாளுவது என்று தெரியவில்லை. மதிய உணவும் கூட தரவில்லை என்றனர்.

தபால் வாக்கு கிடைக்கவில்லை என்றால், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட சங்கங்கள் மூலம் பேசி வருகின்றனர். தபால் வாக்குப் பதிவில் ஏன் இந்தக் குளறுபடி? மாநில கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகி விடும் என்பதால் இப்படி குளறுபடி செய்கிறார்களா என்ற அச்சம் பொதுமக்களிடமும் எழுந்துள்ளது.