/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/aSAFSAFSWRFWRWRWR_0.jpg)
கிருஷ்ணகிரி அருகே, வேலைக்கு செல்லக்கூடாது என கணவர் தடை விதித்ததால், விரக்தியில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, இளம்பெண்ணும் தற்கொலைக்கு முயன்றார். இதில், இரண்டு வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் துவாரகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சரண்யா (23). சரிகா (5), ஜான்விகா (2) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளன. கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு நகைக்கடையில் சரண்யா வேலைக்கு சென்று வந்துள்ளார். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, அதை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வீட்டில் இருந்து வந்தார்.
தற்போது குழந்தை நடக்கத் தொடங்கி விட்டதால், மீண்டும் வேலைக்குச் செல்ல இருப்பதாக சரண்யா கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு சக்திவேல் தடை விதித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. விரக்தியில் இருந்த சரண்யா, அக். 13ம் தேதியன்று, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, தன் இரு குழந்தைகளுக்கும் பாலில் எலி மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளார். பின்னர், இதுகுறித்து அவர் தனது அக்கா கலைவாணிக்கு செல்போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கலைவாணி, உறவினர்களுடன் தங்கை வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கே, சரண்யாவும், குழந்தைகளும் மயக்க நிலையில் கிடந்தனர். மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை ஜான்விகா, வெள்ளிக்கிழமை (அக். 16) உயிரிழந்தாள். சரண்யா, குழந்தை சரிகா ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)