Skip to main content

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து; பயணிகள் காயம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
incident on Kodaikanal Hill Pass Passenger issue

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் டம்டாம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயம் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாயமான பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.