
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் செல்வசுதாகர் (40). திமுக பிரமுகரான இவர் நேற்று முன்தினம் மாலை அதேபகுதியில் உள்ள வடவாற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அதிக அளவு தண்ணீர் வடவாற்றில் சென்றதால் எதிர்பாராத விதமாக அவர் அடித்து செல்லப்பட்டார். குளிக்க சென்ற தந்தை நீண்ட நேரமாக வரவில்லை என்பதால் அவரது மகன் சென்று பார்த்தபோது படிக்கட்டில் செல்போன் மற்றும் கைலி இருந்தது. இதையடுத்து அவர், தந்தையை காணவில்லை என தாயிடம் கூறி அவரையும், ஊர் பொதுமக்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு வடவாற்றுக்கு வந்துள்ளார்.
பொதுமக்கள் வடவாற்றில் இறங்கி தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் காவல்நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் கீழணை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தண்ணீரின் அளவை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனால்தண்ணீர் வெளியேற்றும் அளவு குறைக்கப்பட்டது. அதிகாலை தீயணைப்பு நிலைய வீரர் கொளஞ்சிநாதன் தலைமையில் வீரர்கள் வடவாற்றில் இறங்கி தேடினர். சுமார் 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு செல்வ சுதாகர் சடலமாக மீட்கப்பட்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலைமற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)