incident happened of students claiming to teach karate in ariyalur

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கர்ணன் (36). கர்ணன், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வேலை பார்த்து வந்த பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், அப்பள்ளியில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளிடம், கர்ணன் கராத்தே பயிற்சி கற்றுக்கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில், கராத்தே பயிற்சி கற்றுக்கொடுக்கும் போது 20க்கும் மேற்பட்ட மாணவிகளிடம், கர்ணன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்து போன மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், குழந்தைகள் நல களப்பணியாளர் வீரமணி தலைமையிலான குழு, அப்பள்ளிக்கு சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கர்ணன், அந்த பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு சென்று தலைமறைவானார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கர்ணனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று (01-04-24) செந்துறை பிரிவு ரோடு அருகே கர்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.