/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siren-ni_45.jpg)
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)