incident happened again guindy hospital for patient case

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்படவுள்ளதாகவும், அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி, அவசர சிகிச்சை பிரிவில்மட்டும் மருத்துவர்கள் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(30) என்ற இளைஞர், சென்னை கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (14-11-24) அனுமதிப்பட்டிருந்தார். பித்தப்பை கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட விக்னேஷ், ஏற்கெனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அங்கு போதிய அளவு பணம் செலுத்த முடியாத காரணத்தினால், நேற்று கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் மாற்றப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவரை சரியாக பரிசோதிக்காமல், பொதுப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷின் உடல்நிலை மோசமான காரணத்தினால், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் இல்லாததால் தான் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக கூறி அவருடைய உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். மேலும், மருத்துவர்கள் போராட்டத்திற்குச் சென்றதால் சிகிச்சை அளிக்க வரவில்லை என்றும், எமர்ஜென்ஸி வார்டில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அளிக்க வரவில்லை என்று குற்றச்சாட்டை வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், கிண்டி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

அதே வேளையில், கிண்டி அரசு மருத்துவமனை தரப்பில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், நோய் அதிகரித்ததன் காரணமாக தான் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அன்று அவர் பொது நோயாளியாக பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரின் உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. விக்னேஷின் உடல்நிலை குறித்து அவ்வப்போது விக்னேஷின் தந்தையிடம், மனைவியிடமும் அழைத்து பேசப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடங்களில் தான் விக்னேஷ் உயிரோடு இருப்பார் என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.