/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dspn.jpg)
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிக்குமார். இவர் நேற்று (02-09-24), சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், கேசவநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த காளிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சுழி போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காலிப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காளிக்குமாரின் உடலை இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரின் உடலை வாங்க மறுத்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று காலிப் குமாரின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும், அவர்கள், அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்தஅருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தை கைவிடுமாறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இதனை சற்றும் கேட்காத காலிப் குமாரின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியிலில் ஈடுபட முயன்றனர். மறியலில் ஈடுபட முயன்றவர்களை டிஎஸ்பி காயத்ரி தடுக்க முயன்ற போது, அங்கிருந்த போராட்டக்காரர்கள், அவரின் தலை முடியை இழுத்து பிடித்து கீழே சாய்க்க முற்பட்டனர். உடனடியாக மற்ற போலீசார், அவர்களை தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அசாதாராண சூழல் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர், திருச்சுழி டிஎஸ்பி காயத்ரி, வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளதாகக் கூறி போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்திய பின்பு போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)