police

ஈரோடு திண்டல் வேப்பம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் 68 வயதான முதியவர் பழனிசாமி. விவசாயியான இவரது மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், 37 வயது ரவிக்குமார் என்ற மகனும் உள்ளனர். இதில் மகள் பிரியதர்ஷினி திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்துவருகிறார். மகன் ரவிக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ரவிக்குமார் என்ஜினீயரிங் படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

Advertisment

ரவிக்குமார் அவரது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அதற்கு தந்தை பழனிச்சாமி மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனால் தந்தை மீது தொடர்ந்து ரவிக்குமார் கோபத்தில் இருந்திருக்கிறார். இந்தநிலையில் 1 ந் தேதி இரவு மீண்டும் ரவிக்குமார் தனது தந்தை பழனிசாமியிடம் சொத்தை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கூறி சண்டை போட்டுள்ளார். இதற்கு பழனிசாமி மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார் வீட்டிலிருந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் பழனிசாமியை பலமாக தாக்கியுள்ளார். இதில் பழனிசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ரவிக்குமார் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று தனது தாயை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். தாயர் ருக்குமணி தனது கணவரை அருகில் இருந்த கட்டிலில் படுக்க வைத்திருக்கிறார். நள்ளிரவு 2 மணி அளவில் ருக்குமணி கணவரை எழுப்பியுள்ளார். ஆனால் பழனிச்சாமி பேச்சு மூச்சில்லாமல் அப்படியே இறந்தது விட்டார்.

Advertisment

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு 2 ந் தேதி காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் கொலை நடந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார். இன்ஸ்பெக்டர்கள் விஜயா, சோமசுந்தரம் அகியோரும் உடனிருந்தனர்.மோப்பநாய் ஜெரி வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களைச் சேகரித்தனர். இந்த செய்தி அக்கம்பக்கத்தில் பரவியதும் பழனிசாமி வீட்டு முன்பு ஏராளமானோர் திரண்டு விட்டனர். போலீசார் விரைந்து வந்து பிரேதப் பரிசோதனைக்காக பழனிசாமியின் உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகன் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 1 ந் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பணத்துக்காக விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கொலை நடந்துள்ளது.