ADVERTISEMENT

இந்த கரோனா கொடுமையிலும் புதிய டாஸ்மாக் கடையா... கொதித்தெழுந்த அமைச்சர் தொகுதி பெண்கள்!!

07:22 PM Jul 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

"எத்தனை கரோனா வந்து மக்கள் கொத்து கொத்தா இறந்தாலும் இந்த எடப்பாடி அரசு டாஸ்மாக் கடையை மட்டும் மேலும், மேலும் புதிதாக ஒவ்வொரு ஊரிலேயும் திறந்து கிட்டே இருக்குமாங்க" என ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பெண்கள் கோபத்தோடு கேள்வி எழுப்புகிறார்கள். கோபியிலிருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ளது சிங்கிரிபாளையம் என்ற கிராமம். இங்கு 24 ந் தேதி மதியம் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு சரக்கு விற்பனை ஜோராக தொடங்கியது.

ADVERTISEMENT

மெயின் ரோட்டிலிருந்து சிங்கிரிபாளையம் பொதுமக்கள் இந்த சாலை வழியாகத்தான் அவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். அப்படிபட்ட பிரதான சாலையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் பொதுமக்களும், பெண்களும் கடும் கோபமாகி 25 ந் தேதி காலை கடை திறக்கும் முன்பே ஒன்று கூடி வந்து கடையை திறக்காதே என முற்றுகையிட்டனர். பெண்கள் போராட்டத்தால் பயந்துபோன டாஸ்மாக் ஊழியர்கள் கடையை திறக்காமல் நின்று கொன்டனர். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட கடத்தூர் காவல் நிலைய போலீசார் மறியல் செய்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பெண்களோ "எங்க உயிரே போனாலும் இங்க சாராய கடை வெக்க விடமாட்டோம், நாங்க எல்லாம் கூலி வேலைக்கு போறவங்க; பெண்கள், குழந்தைகள் இந்த வழியாத்தான் ஊருக்கு போக முடியும் இங்க சாராயம் குடிச்சுப்புட்டு குடிகாரனுக தொல்லை தாங்காது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லே.. இங்க திறந்த கடைய கட்சிக்காரங்க வீட்டு முன்னால தெறக்க வேண்டியதுதானே... கரோனா காலத்துல வேலை வெட்டி கிடைக்காம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். இந்த கொடுமையில சாராயக் கடைவேற, நாங்க விடமாட்டங்க சார்" என ஒற்றுமையுடன் வரிசை கட்டி நின்றனர் பெண்கள்.

வேறு வழி இல்லாமல் கடையை பூட்டி விட்டு பெண்களை சமாதானப்படுத்தி அனுப்பினார்கள் போலீசார். டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்திய பெண்கள் அனைவரும் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT