Skip to main content

உயிரைக் குடித்த டாஸ்மாக் சரக்கு...! – குடிகாரர்களுக்கு மரண பீதி!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

erode tasmac

 

ஈரோடு மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் 42 வயதான பாலன் என்ற பாலமுருகன். விசைத் தறிபட்டறை தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. அம்மாவுடன் வசித்து வந்த பாலமுருகனுக்கு மதுப்பழக்கம் நீண்ட காலமாக இருப்பதால் தினமும் மது அருந்துவது அவரது வழக்கம். தறி ஒட்டும் அவர் ஒவ்வொரு நாள் கூலியில் பெரும் பகுதியை டாஸ்மாக் கடைக்கே கொடுத்து சரக்கு வாங்கிக் குடித்துள்ளார். அதிலும் விலை குறைவான சரக்குகள்தான் இவர் வாங்கி குடித்தது.

 

இந்நிலையில், நேற்று இரவு ஈரோடு சூளையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக போதை ஏறிய நிலையில், மது குடித்துவிட்டு, டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, போதையால் நடக்க முடியாமல் தடுமாறி சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். போதையில் கிடப்பவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, இன்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் கிழே படுத்திருந்த பாலமுருகனை எழுப்ப முயன்றபோது, அவர் எழவில்லை. இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஏற்கனவே அவர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, பிறகு அவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

 

பிரேதப் பரிசோதனைக்காக உடலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'அட ஒவ்வொரு நாளும் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்து குடிப்பவராச்சே இன்னைக்கு அதே டாஸ்மாக் சரக்கு அவரை குடித்துவிட்டதே' என அக்கடையின் குடிகார வாடிக்கையாளர்கள் சோகத்தில் மூழ்கி... மேலும், ஒரு கட்டிங் போட்டுவிட்டுச் சென்றதுதான் பெருங்கொடுமை...!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.