Skip to main content

போலீசாரின் அலட்சிய நடவடிக்கையால் இருதரப்பிடையே மோதல்!

Published on 01/10/2020 | Edited on 02/10/2020

 

incident in dindigul

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் போலீசாரின் அலட்சிய நடவடிக்கையால், இரண்டு தரப்பினர் இடையே மோதல் மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக இருதரப்பும் பஸ் மறியலில் ஈடுபட்டதால் வத்தலகுண்டில் பதட்டம் நிலவியது.

வத்தலகுண்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் த.மு.மு.க மாவட்ட தலைவர் பழனிபார் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இம்தியாஸ், நகரச் செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலையில் காளியம்மன் கோவில் அருகே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். இதனையடுத்து, காளியம்மன் கோவில் பகுதியில் நின்றிருந்த இந்து பரிவார சங்க அமைப்பினர், சாலையில் நின்று இதற்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலையில் இந்து முன்னணி சார்பில் நடந்த ராமகோபாலன் நினைவு அஞ்சலி ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை எனக் கண்டனம் தெரிவித்து, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், பி.ஜே.பி இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், வி.ஹெச்.பி அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் இந்து சங்க பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் மறுபுறம் இந்து சங்க பரிவார அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் இடையே பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

இரண்டு தரப்பினரும் நேருக்கு நேர் எதிரே நின்று கோஷங்களை மாறி மாறி எழுப்பினர். தொடர்ந்து பதட்டம் நீடித்து வந்த வேளையில் போலீசார் இரண்டு தரப்பையும் அப்புறப்படுத்ததால், செல்லும் வழியில் இரண்டு கோஷ்டிகளும் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழ்நிலையை உருவானது. அப்போது அங்கு ஏற்பட்ட பதட்டத்தில் ஒருவருக்கொருவர் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மேலும் பதட்டம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களை கண்டித்து இரண்டு தரப்பினரும் முக்கிய சாலையில் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டதால் வத்தலகுண்டில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Ad


போலீசாரின் அலட்சிய நடவடிக்கையால் தேவையில்லாமல் பதட்டம் உருவானதாக இரண்டு தரப்பு நிர்வாகிகளும் குற்றம் சாட்டினர். இரண்டு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் வத்தலகுண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தையடுத்து, தொடர்ந்து நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன் தலைமையில் வத்தலகுண்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்