தர்மபுரி அருகே, ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளி சந்தையில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 90 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

incident in dharmapaurai... school teacher suspended

இதே பள்ளியில் பிரகாஷ்குமார் (54) என்பவர் கணிதபாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாள்களுக்கு முன்பு, ஆறாம் வகுப்பு படித்து வரும் இரண்டு சிறுமிகளிடம் பள்ளி வகுப்பறையிலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அந்த மாணவிகள் இருவரும், தங்கள் பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர், உறவினர்கள் ஆகியோர் வெள்ளிக்கிழமை (நவ. 29) பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

பள்ளித்தலைமை ஆசிரியர் சிவகாமசுந்தரி, வட்டாரக் கல்வி அலுவலர் உமாராணியிடம் கடந்த வாரமே ஆசிரியர் பிரகாஷ்குமார் பற்றி தொலைபேசி மூலம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகும் அவர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாலேயே பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். புகாருக்குள்ளான ஆசிரியரை கைது செய்யவும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரகாஷ்குமாரை பணியிடைநீக்கம் செய்வதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisment

இதையடுத்து, ஆசிரியர் பிரகாஷ்குமாரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணன் உத்தரவிட்டார். மேலும், அவர்மீது புகார் வந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டது குறித்து கல்வி அலுவலர் உமாராணியிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.