/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/004_8.jpg)
டெல்லியில் அழகு நிலையத்தில்தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காவல் துறைக்கு மகளிர் தேசிய ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் லட்சுமி டெல்லி லஜ்பத் நகரில் உள்ள பெண்கள் அழகு நிலையத்தில் தூய்மை பணியாளர் வேலைக்குச் சென்றுவந்த நிலையில் இன்று காலை வேலைக்குச் சென்ற அந்த இளம்பெண் சந்தேகத்திற்கும் இடம்தரும்வகையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மின்சார விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததாக அழகு நிலையம் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் பெண் இறந்து கிடந்த இடத்தில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி இருந்ததாக அப்பெண்ணின் தாய் அங்கம்மாள் புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் டெல்லி வாழ் தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்த மக்கள் அந்த அழகு நிலையம் முன்பு குவிந்து இந்த மரணத்தில் மர்மம் உள்ளது எனவே போலீசார் அழகு நிலைய உரிமையாளர்களை முறையாக விசாரிக்க வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூராய்விற்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் டெல்லி காவல்துறைக்குத் தேசிய மகளிர் ஆணையம், இளம்பெண் மரணம் குறித்து வழக்குப்பதிந்து தொடர்புடைய நபர்களைக் கைது செய்யவேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)