
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியிலிருந்து விருத்தாசலம் நோக்கி விருத்தாசலம் புறவழிச்சாலை வழியாக, கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. பகல் ஒரு மணியளவில் திடீரென விருத்தாசலம் புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது. தீயில் கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதில் காரை ஓட்டி வந்த நபர், காரை விட்டுத் தப்பிக்க முயன்றும் முடியாததால், காரிலேயே எரிந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடல் முழுவதும் எரிந்தது.கார் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று காரை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விருத்தாசலம் போலீசார்விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரை ஓட்டியவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச்சேர்ந்த கவியரசு (37) என்பதும், அவரது மனைவி மணிமேகலை விருதாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாகப் பணிபுரிந்து வருவதும், இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது.

தீ விபத்தில் இறந்த கவியரசு மற்றும் அவரது மனைவி இருவரும் விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கவியரசு வீட்டிலிருந்து கொளஞ்சியப்பர் கோவிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்துமீண்டும் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தீவிபத்து ஏற்பட்டு கார் பற்றி எரிந்தது,முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)